Saturday, October 30, 2010

கவிதை: நெடுக வளர்ந்திருப்பது சதை

இரைச்சி விற்பவனின்
கையில் சிக்கிக் கொண்ட
சதையை
துண்டு துண்டாக
அறுத்துக் கொண்டிருந்தான்.

முதல் துண்டு விழும்போது
இனத்தை
உறுதிப்படுத்திக்கொண்டான்.

இரண்டாவது துண்டு விழும்போது
நிறத்தை
உறுதிப்படுத்திக்கொண்டான்.

மூன்றாவது துண்டு
தரையில் விழுந்து
அவன் கால்களைச்
சுவைத்தது.

நான்காவது துண்டை
அவன் அறுக்கும்போது
மற்ற துண்டுகள்
காட்டிக்கொடுக்கப்பட்டன.

ஐந்தாவது துண்டுக்காக
அவன் கத்தியை
ஓங்கும்போது
மற்ற துண்டுகள்
அடிமையாகின.

ஆறாவது துண்டு
அவனுக்காகத் தலையை
எக்கி நீட்டியது.

ஏழாவது துண்டு
அவனைக் கும்பிட்டு
துதி பாடியது.

எட்டாவது துண்டு
அவனை வருடி
வழித்து சொறிந்து
மகிழ்ச்சிப்படுத்தியது.

ஒன்பதாவது துண்டு விழும்போது
இரைச்சி விற்பவனின்
முன்பாக வாலாட்டி வாலாட்டி
கோமாளி நடனம்
ஆடப்பட்டது.

பத்தாவது துண்டு விழுவதற்கு
முன்பாக
இரைச்சி விற்பவன்
மதிமயங்கி
கைத்தட்டினான்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, September 10, 2010

கவிதை: முடிவுறுதல்

எல்லாமும் தீர்ந்தவுடன்
முதலில் வருவது அச்சம்
பிறகொரு மௌனம்
இறுதியாக வெறுமை.

காட்சிகள் தீர்ந்தவுடன்
புகைப்படங்கள் சேகரிப்பதை
நிறுத்திக்கொண்டேன்.

முந்தைய புகைப்படங்களில்
தென்படும் எனது இருப்பை
ஒவ்வொன்றிலிருந்தும்
கழற்றி எறிகிறேன்.

காலியான இடங்களிலெல்லாம்
அங்கு இல்லாதவனைப் பற்றிய
அனுமானங்களும் சித்தரிப்புகளும்
பெருகத் துவங்கின.

தீர்ந்துபோன ஒருவனை
எந்த இடத்தில் வைத்து
எந்தத் திருப்பத்தில் வைத்து
எந்த வடிவத்தில் வைத்து
எந்த வர்ணத்தில் வைத்து
மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்
என்கிற தவிப்பும் பதற்றமும்
தண்டனையாக மீந்திருக்கிறது.

வசதிப்பட்டவர்கள்
தெரியாதவர்கள்
தெரிந்தவர்கள்
அந்நியர்கள்
உறவுக்காரர்கள்
நண்பர்கள்
என எல்லோரும்
காலியான புகைப்படங்களில்
தன்னை நிரப்பிக் கொண்டதும்
எல்லாமும் மீண்டும்
முடிவுற்றது.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, July 23, 2010

நதியெனும் நதி

உன் கண்களுக்குள்
ஆழமாகச் சென்றுவிட்ட பிறகு
அது பெரும் நதியாய் மிதந்துகொண்டிருப்பதைக்
கண்டேன்.
நீந்துவதற்கான எந்த முனைப்புமின்றி
மிதத்தலில் நிலையுற்றேன்.
அலை அலையாய்
கனவுகளை அள்ளி வீசினாய்,
ஒவ்வொரு கனவின் முடிவிலும்
நீ கண்டு இரசித்த காட்சிகளின்
பிம்பத்தில் கரை சேர்ந்தேன்.
நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
மறுபடியும் பாய்ந்து காணாமல் போகிறேன்
உன் கண்களெனும் பெரும் நதிக்குள்.

-கே.பாலமுருகன்

Saturday, July 10, 2010

கவிதை: சப்தமின்றி

சப்தமின்றி
ஒரு தற்கொலை
நிகழ வேண்டுமென்றால்
மௌளனத்தால் நிரம்பிய
ஒரு வெளி
அமைய வேண்டும்.

அங்கு
இதற்கு முன்
வாழ்ந்தவர்களின் சொல்லப்படாத
சொற்களால் ஒரு பெருஞ்சுவர்
எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

சுவரிலிருந்து ஒழுகும்
இயலாமைகளையும் வலிகளையும்
அள்ளிப் பருகி
சொற்களால் ஆன
பூத உடலைச் சிதைக்க வேண்டும்.

இப்பொழுது
சப்தமின்றி
ஒரு தற்கொலை
சாத்தியமாகலாம்.
அல்லது வரலாற்றில்
எப்பொழுதும்
ஒரு நத்தை மிக தாமதமாக
சில சொற்களைச் சுமந்து
கொண்டு வந்து சேர்வது
சாத்தியமென்றால்
மீண்டும்
தற்கொலை முயற்சி
தோல்வியடைகிறது.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, May 7, 2010

பாத்திரமும் சூத்திரமும்

பாத்திரம்
நிறைய வழிகின்றன
வறுமையும் வெறுமையும்

விடிந்ததும்
நகர்கிறது
ஒரு வாழ்வு
வழக்கமாய் கெஞ்சலுக்கும்
பெறுதலுக்குமிடையே

அழுகைக்குப் பிறகு
தூக்கியெறியப்படும்
சில்லறைகள் அல்ல
மிக ஆபத்தான கழிவிரக்கம்

அடிவயிற்றிலிருந்து
சேகரிக்கப்பட்டு
தரப்படுகின்றன
ஒரு சோற்று பருக்கைக்கான
வேண்டுதல்கள்

முகம் முழுக்க
நிறைந்த பரிதாபங்களை
மறவாமல் அள்ளி செல்லுங்கள்
நீங்கள் போடும்
கொஞ்சம் சில்லறைகளுக்காக

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, April 29, 2010

கவிதை: அடைவதும் பெறுவதும்

1
ஆழ்மனதை
அடைய
அடைய
அடைய
அடைய
எல்லாமுமாக ஆயிருந்தேன்.

2
கோபத்துடனும்
பொறாமையுடனும்
பேராசையுடனும்
காழ்ப்புணர்ச்சியுடனும்
கொலையுணர்வுடனும்
அவர்கள் தூக்கி எறிந்த
அத்துனை சொற்களையும்
புணர வேண்டியிருந்தது.

3
புறக்கணிக்கப்பட்டவர்கள்
தனக்கென ஒரு கதைப்பாத்திரத்தை
வேண்டி
மீண்டும் மகாபாரதத்திற்குள்ளும்
இராமாயணத்திற்குள்ளும்
காப்பியங்களுக்குள்ளும்
நுழைந்து
ஆளுக்கொரு வரலாறை
புனைந்துகொண்டார்கள்.

4
மௌனத்திற்குள்
ஆழ்ந்து கிடக்கும்போது
ஒரு சொல் கிடைக்கிறது.
அதைக் கொண்டு மீண்டும்
மௌனத்திலிருந்து விடுப்படக்கூடும்.
மீண்டும் அந்தச் சொல்லைத்
தொலைப்பதன் மூலம்
மீண்டும் ஒரு மௌனத்தை அடையலாம்.
சொல்லின் பெயர் “நான்”

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, April 2, 2010

கவிதை: விவாதத்திற்குத் தயாராகுதல்

நண்பர்களிடமும்
சக பணியாளர்களிடமும்
யாரிடமும்
விவாதிப்பதற்கு முன்பதாகவே
அன்றைய இரவு
சொற்களைத் தேர்வு
செய்ய வேண்டியுள்ளது.

கற்பனை வளம்
வாதத்திறமை
எதிர்தொனி
மொழிவளம்
இலக்கண கட்டமைப்பு
என்கிற அத்துனை
வரயறைகளையும் கொண்ட
சொற்கள் தேவைப்படுகின்றன
எதிர்பிரதியின் கருத்துகளைத்
முடமாக்க.

விவாதிப்பதற்கு அமரும் முன்
எல்லாம்வகையான தீர்மானங்களையும்
கொண்கிருக்கும் சொற்கள்
முன்னால் இருப்பவரை
வசப்படுத்த மெல்ல மெல்ல
வன்முறையைக் கையாளும்.

விவாதம்
அர்த்தமற்ற ஒரு புள்ளியை
வந்தடையும்போது
நமது சொற்கள்
எதிர்பிரதியின் தொண்டைக்குள்
நுழைந்து அவரை
நமதாக்கியிருக்கும் அல்லது
சோர்வடையும் வகையில்
சலிப்பைக் கசிந்திருக்கும்.

விவாதம்
எங்கு முடிவடையும்
என்கிற முடிவில்லாத தொடர்ச்சியில்
சொற்கள் கட்டமைத்த
சார்பின் பிரதி
சுயத்தையும் எதிர்பிரதியையும்
தோற்கடித்திருக்கும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

.

Saturday, March 13, 2010

கவிதை: சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்

கரைந்து காணாமல்
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.

உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போகக்கூடும்.


நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.

உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.


உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.

நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.

உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.

எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.

சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, February 19, 2010

ஒரு வானமும் சில மழைக்காலங்களும்

மூதாதையர்களின் சிரிப்பொலிகளை
இரவுநேர கதைகளை
ஜெனரேட்டர் ஒலிகளை
நெல்லிக்காய் மரத்திற்காக மழைக்காலத்தில்
வந்துசேரும் பறவைகளை
அடிக்கடி தவறவிடும் வெளிச்சங்களை
தாத்தாவின் குரட்டை சப்தங்களை
வெளிக்கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும்
அம்மாச்சியின் உடைகளை
மரத்தோம்பு வாளியின் நீர் மேற்பரப்பில்
எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை
எல்லாவற்றையும் விழுங்கிய மீதமாக
இறந்தகாலத்தின் ஓசைகளாக
இன்றும் நெளிகிறது ஒரு பழங்கிணறு.
நெல்லிக்காய் மரத்திலிருந்து
இன்று உதிரக்கூடும்
முன்பிருந்த
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
நாய்க்குட்டியும் நானும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 மலேசியா

Friday, February 12, 2010

திரும்பவும் ஒரு பறவை

சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்

நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்புகிறது

மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்

தவறவிட்ட
சிறகுகளையும் உறவுகளையும்
எடுத்துச் செல்ல
நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்

(2010- மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசும் எம்.ஏ இளஞ்செல்வன் கோப்பையையும் வென்ற கவிதை)

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா