Thursday, August 6, 2009

நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்

பக்கத்து ஊரிலிருந்து
தப்பித்து வந்த
மழைக்குருவியின் கால்களிலிருந்து
தவறுதலாகச் சொட்டிவிட்டது
சில மழைத்துளிகள்

வெகுநேரமாக தனது சிறகை
சிலுப்பிக் கொண்டிருந்த
சிட்டுக்குருவின் உடல்கள் எங்கும்
தேங்கிக் கிடந்தது மழைக்காலம்

உறக்கத்திலிருந்த விழித்தெழுந்தபோது
கண்களிலிருந்து வழிந்திருந்த கண்ணீரில்
எப்பொழுதோ அனுபவித்த ஒரு மழைக்காலத்தின்
துயரங்கள் ஒட்டிக் கிடந்தன.

நீ சிரிக்கும்போதெல்லாம்
அதன் ஒலியிலிருந்து பிரிந்து வருகிறது
இருவரும் ஒன்றாக பார்த்து இரசித்து நனைந்து
சாலையின் ஓரங்களில் கைகளை நீட்டி
விளையாட்டாக எக்கிப் பிடிக்க நினைத்த
ஒரு மழைப்பொழுது.


சாரலுக்குப் பிறகு
முழுக்க நனைந்துவிடுகிறது
மனமும் பொழுதுகளும்.


2

எங்கோ பிடித்த மழை
இங்கு வந்து
பழி தீர்க்கிறது.
ஒவ்வொரு சொட்டிலும் துரோகமும் அவமானங்களும்
நிரம்பி ஒழுகுகின்றன.
இனி யார் சொல்லியும்
திரும்பப் பெறாத மழை.

கே.பாலமுருகன்
மலேசியா

thanks:thinnai.com
bala_barathi@hotmail.com

Wednesday, August 5, 2009

சிறுகதை: செல்லம்மாவின் மரணத்திற்கு வந்தவர்கள்

செல்லம்மா அக்காள் இறந்துபோயிருந்தாள். வாசற்படியில் அமர்ந்துகொண்டு பிதற்றலுக்கு ஆளாகி ஒரு பைத்தியநிலையில் தம்பிவேணு யாருமற்ற வெளியைப் பார்த்து தொடர்ந்து முணகிக் கொண்டே இருந்தான். தம்பிவேணுக்கு 54வயதாகியிருந்ததை யாரும் ஞாபகப்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அரைக்கால் சட்டையுடன் முட்டிகளில் விம்மி புடைத்திருக்கும் சேற்றுப் புண்களின் வீச்சத்துடன் கால்கள் இரண்டையும் மடக்கி மெலிந்து போயிருந்த மார்பகத்தில் இடுக்கி வைத்துக் கொண்டு செல்லம்மா அக்காள் படுத்திருந்ததை வெறித்துக் கொண்டிருந்தான்.

"கடைசிவரைக்கும் தனியாவே இருந்து எந்த சொகமும் பார்க்காமெ செத்துட்டா. . கொண்டு போயி போடக்கூட எவனும் இல்லெ மகன்னு சொல்லிக்கிட்டு. . தனியா மட்டும் வாழ்ந்துட்டா இப்படித்தான். ."

தம்பிவேணுக்கு எழுந்துபோய் அந்த வார்த்தைகளை ஒப்புவித்துக் கொண்டிருந்தவனின் வாயில் ஓங்கி அல்லது முடிந்தவரையில் உயரமாக எகிறி சினிமா கதாநாயகனின் உடல்மொழிக்கேற்ப பலம்கொண்டு குத்த வேண்டும் போல இருந்தது. கால்கள் அவனது இயலாமையைக் கட்டிப் போட்டிருந்ததால் கண்களை நிமிர்த்தி வீட்டுக்குள்ளாக பரவியிருக்கும் ஒரு துர்மரணத்தைச் சுவாசித்துப் பார்த்தான். மரணத்திற்கு ஒரு வாசமுண்டு. செல்லம்மாவின் தலைமாட்டிலிருந்து 3அடி தொலைவில் கொளுத்தி வைத்திருந்த ஊதுவத்தி மணம் செல்லம்மாள் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தது.

"எவனாவது பொணத்தெ எடுத்துப் போட்டுத்தான் ஆகணும். அக்கம்பக்கம் மனுசாளுங்க எதுக்கு இருக்காங்க. நாங்களாம் இல்லையா?"

மரண வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க வந்ததை உறுதி செய்வது போல இடத்திற்கு உகந்த சொற்களை உதிர்த்துவிட்டு தன் வருகையைப் பதிவு செய்துகொண்டிருந்தார் ஒருவர். அவரின் கழிவிரக்கம் தம்பிவேணுக்கு மேலும் கோபத்தை வலுக்கச் செய்தது. பாய்ந்துபோய் அவரின் மார்பில் குதிக்க வேண்டும் என்பதற்கு நிகரான மனச்சித்தரிப்பில் அவன் ஆழ்ந்திருந்தான். கற்பனையால் அவரைப் போட்டு வெளுத்துக் கட்டினான். அவனால் இயன்றது தனது கற்பனைகளில் அவனை நுழைத்து அதற்குக் கால்கள் கொடுப்பது மட்டுமே.

"சரியா. . இந்தம்மாக்குச் சொந்தக்காரனுங்க எங்க இருக்கானுங்கனு தெரில, தகவல் சொல்ல யாரெ கூப்டறதுன்னும் தெரில. நம்ப பாட்டுக்கு எப்படிப் பொணத்தெ தூக்கறது?"

கூட்டத்தில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த சிலருக்குள்ளிருந்து ஒரு தலை மட்டும் எழுந்து தீர்ப்பு வழங்க முற்பட்டது.

"இல்லைப்பா.. அவுங்க இங்க இருந்தவரைக்கும் யாருமே அவங்கள பாக்க வரல. . அப்படின்னா யாரும் இல்ல போல"

"அதெப்படிப்பா ஒரு மனுசனுக்கு எந்தச் சொந்தமும் இல்லாமெ போயிரும்? நம்பத்தான் முயற்சி எடுத்து தேடணும், இல்லன்னா பேப்பர்ல அறிவிப்பு கொடுக்கணும்"

செல்லம்மாளின் உடலில் ஈக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. தம்பிவேணு எழுந்து உள்ளே சென்று அந்த ஈக்களை விரட்டலாம் என்று உடலைத் தன் கட்டுப்பாட்டுக்குள்ளிருந்து தளர்த்துவதற்கு மெல்ல களைந்தான்.

வீட்டின் முன்வாசல் கதவுவரை அருகிலிருந்த நண்பருடன் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தவரின் குரல் மெல்ல உடைந்து சோகமான தொனிக்கு மாறியது.

"ச்சே.. பாவம்லே"

அவனை அங்கேயே நிறுத்தி முகத்தில் காறி உமிழ வேண்டும். தம்பிவேணு எழுந்து திடமாக நிற்பது போல காட்டிக் கொண்டான். அவனது உடல் அதற்குச் சற்றும் இடமளிக்காத சூழலில் வயிற்றுப் பகுதியில் சுளீரென ஒரு வலி. அது ஒருவேளை பசியாகக்கூட இருக்கலாம். வீட்டிலிருந்து வெளியேறி சீனக்கடைக்குச் சென்றால் ஏதாவது மிச்சம் மீதியைத் தூக்கி வீசுவான். அதைப் பாவப்பட்ட ஜென்மமென வாங்கிக் கொண்டு கடையோரத்தில் அமர்ந்துகொண்டு சாப்பிடலாம். அவனைக் கடக்கும் உயர்வகை மகிழுந்தின் உரிமையாளர் யாராகினும் ஆங்கிலத்தில் எதையாவது திட்டி வைக்கலாம். (ஜப்பான் தொழில்நுட்பவகை கார்களை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் உரையாடுவார்கள்) அதைத் தமிழில் மொழிபெயர்த்தால், "கழிசடை! அநாகரிக நாய்" இப்படி ஏதாவது விளங்கும். பாவம் தம்பிவேணுக்கு கர்மம் இந்த ஆங்கிலமும் தெரியாது, தமிழையும் சரியாக உச்சரிக்க வராது.

"அப்பே. . மக்கான்." இப்படி முகத்தைப் பரிதாபமாக வைத்துக் கொண்டு கேட்க மட்டுமே தெரியும்.

செல்லம்மாளுக்காக இல்லை, அவளின் இறந்த பிரேதத்திற்காக போலித்தனமான குரல்களையும் விசாரணைகளையும் சுமந்துகொண்டு ஒவ்வொருவராக உள்ளே நுழைந்துகொண்டிருந்ததை தம்பிவேணு பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொருவரும் வாயில் மரணத்தைக் கவ்விக்கொண்டும், உள்ளே வந்ததும் வெளியே துப்புவதுமாக பரபரத்துக் கொண்டிருந்தார்கள். நாக்கு வெளியில் தொங்க பேய் போல முகத்தை மாற்றியமைத்துக் கொண்டு சரசரவென வீட்டிற்குள் வந்து விழுந்து தொலைத்தார்கள்.

அவனுக்குக் கண்கள் மங்குவது போலவும் செல்லம்மாளின் வீட்டில் ஆள்நடமாட்டம் அவனுடைய வெளியை அறுப்பது போலவும் தொடர் பிரமையென உருவாகிக் கொண்டே இருந்தது.

"சாங்கியம் செய்ய காசு வேணும்பா. . சொந்தக்காரங்க யாரும் இல்லெ. . அவுங்க இங்க வந்து ஒரு ஆறு மாசம்தான். எங்கேந்து வந்தவங்கனும் தெரில. வீடு முழுக்க ஏதாவது பணம் இருக்கானு தேடிப் பாருங்கப்பா. . யாரு அடக்கம் பண்ற செலவெ எடுத்துக்குறாங்களோ அவுங்க கையில கொடுத்துறலாம்"

தம்பிவேணு வீட்டிற்குள் எக்கிப் பார்த்தான். இருள் விலகி ஓர் அதிசயம் நிகழ வேண்டும் எனக் காட்சிகளை உடைத்துச் செதுக்கினான். செல்லம்மா எழுகிறாள். எழுந்து அமர்ந்துகொண்டு எல்லோரையும் பார்த்து சிரிக்கிறாள். தையல் இயந்திரத்தின் முன் அமர்ந்துகொண்டு துணிகளைத் தயார்ப்படுத்தி வைக்கிறாள். தையல் இயந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க, செல்லம்மா வீட்டில் ஒரு இரம்மியமான பழைய பாடலும் ஒலித்துக் கொண்டிருக்கவும் செய்கிறது.

"டே! தம்பிவேணு வீட்டுப் பக்கம்வாடா. . சோறு தரேன். நல்லா சாப்ட்டுக்க. யேன் இங்க உக்காந்து இப்படி சாப்படறே?"

முதல்முறையாக இப்படிக் கிழிந்த ஆடைகளுடன் தாடி வளர்ந்த அருவருக்கத்தக்க ஓர் ஆசாமியைப் பார்த்து உரிமையுடன் பெயர் சொல்லி அழைத்த செல்லம்மாளைப் பார்த்தது அந்தச் சீனக்கடையில்தான்.

"என் பேரு உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"அந்த சீனன்கிட்ட கேட்டண்டா. . கெட்ட வார்த்தைலெ ஏதோ சொல்லிட்டு பைத்தியக்காரப் பையன்னு சொன்னான். . பேரும் சொன்னான். . நீ பாக்கறதுக்கு என் தம்பி மாதிரியே இருக்கடா. . "

"அடப்போடி. ." என்று எதையோ சொல்ல முனைந்தவன், தொண்டைவரை வந்ததும் விழுங்கிக் கொண்டான். நாசி ஆயாம் உணவின் வாடை அவனைச் சமரசம் செய்துவிட்டிருக்கலாம்.

செல்லம்மாளின் வீட்டிற்கு 3 முறைதான் தம்பிவேணு சென்றிருக்கிறான். எவ்வளவோ வற்புறுத்தியும் வீட்டின் வாசல்வரை வந்து அமர்ந்துகொள்ளவே தம்பிவேணுவால் இயன்றது. செல்லம்மாள் தையல் இயந்திரத்தில் கால்களைக் கொண்டு இலகுவாக இயக்க அவளின் கைகள் ஒரு தியானத்தின் ஒருமைக்கேற்ப எல்லாவற்றையும் சரிப்படுத்திக் கொண்டிருந்தன. தம்பிவேணு வயிறு நிரம்பச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

"இனிமே யாருகிட்ட துணி தைக்கறது? பக்கத்துக் கம்பத்துக்குத்தான் போகணும். . யேன்ப்பா பொணத்தெ எப்ப எடுக்கறாங்க? என்ன ஒரு சொந்தக்காரப் பையனும் இல்லையா?"

"தூ. ." வாயில் எதையோ முனகிக் கொண்டே தம்பிவேணு வீட்டிலிருந்து கிளம்பி வேகமாக நடக்கத் துவங்கினான். அதற்கு மேல் அவனது இருப்பு ஓர் ஆபத்தாக முடிந்துவிடும் என்று அஞ்சியவன், அங்கிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்வதாகத் தீர்மானித்துவிட்டு உடலின் நடுக்கோட்டிலிருந்து தளர்ந்து தொங்கிய அரைக்கால் சட்டையைத் தூக்கி சரிசெய்துகொண்டான். வெயிலின் உக்கிரம் அவனுடைய உடல் முழுக்க பரவ, கால் பாதத்தில் கடுமையாகச் சுட்டது. வெயிலை மிதித்துக் கொண்டு தனது சக்திகளைத் திரட்டி நடையை வேகப்படுத்தினான். பெரிய சாலைக்கு வந்ததும் பசி அதிகமானது. எல்லாமும் எப்பொழுதும் போல நகர்ந்துகொண்டும் விரைந்துகொண்டும் நேர்த்தியாகக் காட்சியளித்தது. சாலையை வலதுபக்கமாகக் கடந்து சீனக்கடைக்கு நடந்துகொண்டிருந்தான் தம்பிவேணு.

கே.பாலமுருகன்
bala_barathi@hotmail.com
நன்றி: உயிரோசை வார இதழ்

Tuesday, August 4, 2009

மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்



1

சொற்கள் உடைந்து தவறியப்போது
ஒவ்வொரு சொற்களின் வலைவுகளிலும் நெளிவுகளிலும்
சிறு சிறு துண்டுகளென நான் சேர்க்கப்பட்டிருந்தேன்.
கோழைத்தனமாக அதிகாரத்திற்குப் பயந்தபோது
அறைக்குள் நெளிந்து துடித்தழுதபோது
தோல்விகளைக் கண்டு உலர்ந்து கிடந்தபோது
சோம்பலில் நாள்முழுக்க உறங்கிக் கிடந்தபோது
மூத்தவர்கள் காறி உமிழ்ந்து வசைகளை எறிந்தபோது
நண்பர்கள் தூரோகியென விரட்டியடித்தபோது
கதைகளுக்கும் கவிதைகளுக்கும் வார்த்தைகள் தேட அவைகள்
எட்டி நின்று என்மேல் வெறுமையை கரைத்தபோது
என் முகமும் அகமும் அருகாமையின் கலைநேர்த்தியுடனும்
ஒழுங்குகளின் மிகைவடிவங்களுடனும் புகைப்படங்களென
சொற்களுக்குள் சேமிக்கப்பட்டிருந்தன.

சொற்கள் உடைவதில் ஒரு சந்தர்ப்பமென
பல அதிசயங்கள் நிகழலாம்.
அவற்றுள் என் ஆல்பமும்
என் முகங்களும்
பிறர் மிதித்துச் செல்ல
மிக அதீதமான வசதியுடன் சாலைகளில்
சில துரோகங்களையும் சில அவமானங்களையும்
முகப்புகளென அடியொட்டி
இலவசமாக கிடைக்கும்.
குறைந்தபட்சம் விலை அதிகமுள்ள
காலணிகளுடன் வாருங்கள்.

2

பிறரின் வசதிகளுக்கேற்ப
எனது ஆல்பம்
தயாரிக்கப்பட்டது.
முதல் பக்கத்தில் உங்கள் பெயர்களைப்
பதிவிட மறவாதீர்கள்.
மேலும் கடைசிவரை ஆல்பத்தைப் பார்த்துவிட்டுச் செல்பவர்களுக்கு
என் முகம் பதித்த ஒரு குறுந்தட்டு
இலவசமாகக் கொடுக்கப்படும்.
நீங்கள் விரும்பும்படி சிதைத்துக்கொள்ள.


3

திரையரங்குகளிருந்து படம் முடிந்ததும்
வெளியே சிதறுபவர்களுக்கு
எனது சிதைந்த ஆல்பத்தைப் பார்ப்பதில்
அவசரமிருந்தது.
கைகளுக்கெட்டிய என் புகைப்படங்களை
இலகுவாகக் கிழித்தெறிந்துவிட்டு நகர்ந்தார்கள்.

வேலை முடிந்து “மாமாக்” கடையில்
ஒரு கோப்பை தேநீர் அருந்திவிட்டு வந்தவர்கள்
ஒரு சோம்பலான அசைவுகளுடன் வெறுமனே
என் ஆல்பத்தை எத்திவிட்டு சிறு பரவசத்துடன்
நடந்தார்கள்.

தமிழ் இலக்கியக்கூட்டம் முடிவடைந்து
ஆவேச சொற்களுடன் பொங்கியபடியே வந்த ஆர்வலர்கள்
என் ஆல்பத்தின் ஆபாசங்களைக் கண்டு
நடுங்கி கொதித்தெழுந்து
வீரியமடைந்த மறுகணத்தில்
கொத்தி கொத்தி தின்றார்கள் மீதமிருந்த
புகைப்படங்களை.


4

இவ்வளவு சம்பவங்களுக்கும் சிதைவுகளுக்குப் பிறகும்
மேலும் கலர் படங்களுடன்
இலவசமாகவே கிடைக்கும்
எனது முகங்களையும் அகத்தின்
புகைப்படங்களையும் கொண்டிருக்கும்
ஆல்பம்.


கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com