Saturday, March 13, 2010

கவிதை: சொற்களை இழப்பதும் மௌனத்தைப் புனைவதும்

கரைந்து காணாமல்
போவதற்குரிய அத்துனை
சாத்தியங்களையும்
கற்றுக் கொண்டன
சொற்கள்.

உங்களின்
கவிதைகளிலிருந்தும்
கட்டுரைகளிலிருந்தும்
சிறுகதைகளிலிருந்தும்
நாவல்களிலிருந்தும்
எப்பொழுது வேண்டுமானாலும்
சொற்கள் காணாமல்
போகக்கூடும்.


நீங்கள் குறிப்பிடும்
கலை என்கிற மாபெரும்
ஆவணங்களிருந்து
உதிர்ந்த சொற்கள்
எல்லாவற்றையும் வெறும்
காகிதங்களாக மாற்றக்கூடும்.

உங்களின் கதைக்குள்
இருக்கும் கதைப்பாத்திரங்கள்
காகிதம் முழுக்க
நிரம்பியிருக்கும்
சொற்கூட்ட்ங்களை
விழுங்க முயற்சிக்கும்
தருணத்தில் தங்களின் படைப்புலகம்
சிதையத்துவங்கும்.


உங்கள் நாவலின்
எதிர் உருவாக்கங்களும்
முரண் பாத்திரப்படைப்புகளும்
இழந்த அறங்களை சொற்சிதைவிலிருந்து
மீண்டும் பெற்று
உங்களின் அறத்திற்கு எதிராக
எல்லாம் வன்முறைகளையும்
நிகழ்த்தக்கூடும்.

நீங்கள் புதைத்து வைத்திருக்கும்
கதையின் மையத்தைத் திருடும் சொற்கள்
அதைக் கதையின் தொடக்கத்தில்
புனைந்து
உங்கள் கதையின் வலிமையை
உடைக்கக்கூடும்.

உங்கள் கட்டுரைகளில்
வலிந்து புகுத்தப்படும்
தத்துவங்களும் வியாக்கியானங்களும்
தமது சொற்களை பகிர்ந்துகொண்ட பிறகு
அர்த்தமற்ற ஒரு வாக்கியமாக
தேங்கிவிடக்கூடும்.

எல்லாமும் நிகழ்ந்துவிட்டபிறகு
வெறும் மௌனமும் வெறுமையும்
மீந்திருக்கும் ஒரு பிரதியை
மட்டும் உங்களிடம் கொடுத்திருக்கக்கூடும்
சொற்கள்.

சொற்களின்றி
எதைப் புனைவதென்ற
விரக்தியில்
மாபெரும் மௌனம்
அடர்ந்திருக்கும்
உங்களுக்குள்ளும்
உங்களுக்கு வெளியேயும்
காட்சிகளை உதிர்த்த
வெறும் ஓவியமாக.

ஆக்கம்: கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா