Thursday, January 6, 2011

கவிதை: பொம்மைகள் பிடிக்கும் என்கிற கொடூரம்

எல்லோரும் பொம்மைகளைத்தான்
வாங்கிக் கொடுத்து
என்னைப் பழக்குகிறார்கள்.

சில சமயங்களில் மிதிப்பட்டு
பல நேரங்களில் என்னால் கொடுமைப்படுத்தப்பட்டு
தேவைப்படாத பொழுதுகளில்
மூலைகளில் விசிறியடிக்கப்பட்டு
எனது முழுமையான கோபத்தையும்
அதிகாரத்தையும்
வெறுப்பையும்
அலட்சியத்தையும்
காட்டி காட்டி
சோர்வடையும்வரை
என்னை எதற்காகவோ
பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பொம்மைகளுடன் படுக்க வைத்து
அடம் பிடித்த சமயங்களில்
பொம்மையை என்னுள் திணித்து
காலுடன் சேர்த்துப் பொம்மையைக்
கட்டிப்போட்டு
மீண்டும் மீண்டும் ஒன்றும் செய்யாத
அந்தப் பொம்மையை நேசிக்க வைத்திருந்தார்கள்.

வீட்டின் ஏதோ சில பகுதிகளில்
இன்றளவும் பிய்த்து எறியப்பட்டுக்
கிடக்கின்றன
யார் யாரோ வாங்கிக் கொடுத்த
கரடி பொம்மைகளும்
நாய் பொம்மைகளும்.

ஒவ்வொன்றிலும்
நான் திரும்ப திரும்ப
எனக்குப் பொம்மைகள்
பிடிக்கும் என்கிற
கொடூரத்தை உணர்ந்து கொள்கிறேன்.

கே.பாலமுருகன்
மலேசியா

Saturday, October 30, 2010

கவிதை: நெடுக வளர்ந்திருப்பது சதை

இரைச்சி விற்பவனின்
கையில் சிக்கிக் கொண்ட
சதையை
துண்டு துண்டாக
அறுத்துக் கொண்டிருந்தான்.

முதல் துண்டு விழும்போது
இனத்தை
உறுதிப்படுத்திக்கொண்டான்.

இரண்டாவது துண்டு விழும்போது
நிறத்தை
உறுதிப்படுத்திக்கொண்டான்.

மூன்றாவது துண்டு
தரையில் விழுந்து
அவன் கால்களைச்
சுவைத்தது.

நான்காவது துண்டை
அவன் அறுக்கும்போது
மற்ற துண்டுகள்
காட்டிக்கொடுக்கப்பட்டன.

ஐந்தாவது துண்டுக்காக
அவன் கத்தியை
ஓங்கும்போது
மற்ற துண்டுகள்
அடிமையாகின.

ஆறாவது துண்டு
அவனுக்காகத் தலையை
எக்கி நீட்டியது.

ஏழாவது துண்டு
அவனைக் கும்பிட்டு
துதி பாடியது.

எட்டாவது துண்டு
அவனை வருடி
வழித்து சொறிந்து
மகிழ்ச்சிப்படுத்தியது.

ஒன்பதாவது துண்டு விழும்போது
இரைச்சி விற்பவனின்
முன்பாக வாலாட்டி வாலாட்டி
கோமாளி நடனம்
ஆடப்பட்டது.

பத்தாவது துண்டு விழுவதற்கு
முன்பாக
இரைச்சி விற்பவன்
மதிமயங்கி
கைத்தட்டினான்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, September 10, 2010

கவிதை: முடிவுறுதல்

எல்லாமும் தீர்ந்தவுடன்
முதலில் வருவது அச்சம்
பிறகொரு மௌனம்
இறுதியாக வெறுமை.

காட்சிகள் தீர்ந்தவுடன்
புகைப்படங்கள் சேகரிப்பதை
நிறுத்திக்கொண்டேன்.

முந்தைய புகைப்படங்களில்
தென்படும் எனது இருப்பை
ஒவ்வொன்றிலிருந்தும்
கழற்றி எறிகிறேன்.

காலியான இடங்களிலெல்லாம்
அங்கு இல்லாதவனைப் பற்றிய
அனுமானங்களும் சித்தரிப்புகளும்
பெருகத் துவங்கின.

தீர்ந்துபோன ஒருவனை
எந்த இடத்தில் வைத்து
எந்தத் திருப்பத்தில் வைத்து
எந்த வடிவத்தில் வைத்து
எந்த வர்ணத்தில் வைத்து
மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்
என்கிற தவிப்பும் பதற்றமும்
தண்டனையாக மீந்திருக்கிறது.

வசதிப்பட்டவர்கள்
தெரியாதவர்கள்
தெரிந்தவர்கள்
அந்நியர்கள்
உறவுக்காரர்கள்
நண்பர்கள்
என எல்லோரும்
காலியான புகைப்படங்களில்
தன்னை நிரப்பிக் கொண்டதும்
எல்லாமும் மீண்டும்
முடிவுற்றது.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, July 23, 2010

நதியெனும் நதி

உன் கண்களுக்குள்
ஆழமாகச் சென்றுவிட்ட பிறகு
அது பெரும் நதியாய் மிதந்துகொண்டிருப்பதைக்
கண்டேன்.
நீந்துவதற்கான எந்த முனைப்புமின்றி
மிதத்தலில் நிலையுற்றேன்.
அலை அலையாய்
கனவுகளை அள்ளி வீசினாய்,
ஒவ்வொரு கனவின் முடிவிலும்
நீ கண்டு இரசித்த காட்சிகளின்
பிம்பத்தில் கரை சேர்ந்தேன்.
நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
மறுபடியும் பாய்ந்து காணாமல் போகிறேன்
உன் கண்களெனும் பெரும் நதிக்குள்.

-கே.பாலமுருகன்

Saturday, July 10, 2010

கவிதை: சப்தமின்றி

சப்தமின்றி
ஒரு தற்கொலை
நிகழ வேண்டுமென்றால்
மௌளனத்தால் நிரம்பிய
ஒரு வெளி
அமைய வேண்டும்.

அங்கு
இதற்கு முன்
வாழ்ந்தவர்களின் சொல்லப்படாத
சொற்களால் ஒரு பெருஞ்சுவர்
எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

சுவரிலிருந்து ஒழுகும்
இயலாமைகளையும் வலிகளையும்
அள்ளிப் பருகி
சொற்களால் ஆன
பூத உடலைச் சிதைக்க வேண்டும்.

இப்பொழுது
சப்தமின்றி
ஒரு தற்கொலை
சாத்தியமாகலாம்.
அல்லது வரலாற்றில்
எப்பொழுதும்
ஒரு நத்தை மிக தாமதமாக
சில சொற்களைச் சுமந்து
கொண்டு வந்து சேர்வது
சாத்தியமென்றால்
மீண்டும்
தற்கொலை முயற்சி
தோல்வியடைகிறது.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, May 7, 2010

பாத்திரமும் சூத்திரமும்

பாத்திரம்
நிறைய வழிகின்றன
வறுமையும் வெறுமையும்

விடிந்ததும்
நகர்கிறது
ஒரு வாழ்வு
வழக்கமாய் கெஞ்சலுக்கும்
பெறுதலுக்குமிடையே

அழுகைக்குப் பிறகு
தூக்கியெறியப்படும்
சில்லறைகள் அல்ல
மிக ஆபத்தான கழிவிரக்கம்

அடிவயிற்றிலிருந்து
சேகரிக்கப்பட்டு
தரப்படுகின்றன
ஒரு சோற்று பருக்கைக்கான
வேண்டுதல்கள்

முகம் முழுக்க
நிறைந்த பரிதாபங்களை
மறவாமல் அள்ளி செல்லுங்கள்
நீங்கள் போடும்
கொஞ்சம் சில்லறைகளுக்காக

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Thursday, April 29, 2010

கவிதை: அடைவதும் பெறுவதும்

1
ஆழ்மனதை
அடைய
அடைய
அடைய
அடைய
எல்லாமுமாக ஆயிருந்தேன்.

2
கோபத்துடனும்
பொறாமையுடனும்
பேராசையுடனும்
காழ்ப்புணர்ச்சியுடனும்
கொலையுணர்வுடனும்
அவர்கள் தூக்கி எறிந்த
அத்துனை சொற்களையும்
புணர வேண்டியிருந்தது.

3
புறக்கணிக்கப்பட்டவர்கள்
தனக்கென ஒரு கதைப்பாத்திரத்தை
வேண்டி
மீண்டும் மகாபாரதத்திற்குள்ளும்
இராமாயணத்திற்குள்ளும்
காப்பியங்களுக்குள்ளும்
நுழைந்து
ஆளுக்கொரு வரலாறை
புனைந்துகொண்டார்கள்.

4
மௌனத்திற்குள்
ஆழ்ந்து கிடக்கும்போது
ஒரு சொல் கிடைக்கிறது.
அதைக் கொண்டு மீண்டும்
மௌனத்திலிருந்து விடுப்படக்கூடும்.
மீண்டும் அந்தச் சொல்லைத்
தொலைப்பதன் மூலம்
மீண்டும் ஒரு மௌனத்தை அடையலாம்.
சொல்லின் பெயர் “நான்”

கே.பாலமுருகன்
மலேசியா