Wednesday, March 23, 2011

கவிதை: கொலையுணர்வு

கைக்கு எட்டாத கரும்பலகை
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.

ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின் பாதி
உடல் அழிக்கப்படுகிறது.

எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.

உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.

கடைசி சொல்லின்
உடலை அடையும்வரை
சோர்வில்லை விலகலுமில்லை.

கரும்பலகையின் கோடியில்
மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை
அழித்துவிட்டப் பிறகு
சிறுமியின் முகத்தில்
போர் முடிந்த களைப்பு.

கே.பாலமுருகன்

Friday, March 11, 2011

கவிதை: சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்


எப்பொழுதும் போலவே
இன்றும்
கிழக்குக்கரையைப் பற்றிய
ஒரு கதை
அடித்துச் சென்றது
சுங்கை நதியில்.

அநேகமாக
கிழக்குக்கரையிலுள்ள
அஞ்சலைப் பாட்டி
இறந்திருக்கக்கூடும்
அல்லது இன்று
கூடுதலான
மலம் கழிக்கப்பட்டிருக்கும்.

மீண்டும்
மழைக்காலத்திற்குப் பிந்தைய
ஒரு அதிகாலையில்
அடர்ந்த கதைகளுடன்
முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றது
யாருமற்ற தனிமையில்
சுங்கை நதி.

தவுசே சீனக் கிழவியின்
வீட்டின் மூன்றாவது
கால் இடறி
வீட்டை முழுங்கிய
ஒரு செய்தியை
எப்படிக் கதையாக
மாற்றக்கூடிய சாமர்த்தியம்
வாய்த்திருக்கும்
சுங்கை நதிக்கு?

அம்மோய் அக்காவின்
குடிக்கார கணவன்
எப்படி ஒரு கதைக்குள்
தவறி விழுந்து
இறந்திருக்கக்கூடும்?

வரிசையாக நின்று
சுங்கை எனும் கதைக்குள்
மூத்திரம் பெய்த சிறுவர்களில்
இருவர்
ஒரு மழைக்காலத்தில்
கதையிலிருந்து நீங்கிவிட்டதன்
சோகத்தை எப்படி
புனைந்திருக்கும்
சுங்கை நதி?

மீண்டும்
ஒரு அதிகாலை.
யாருக்கும் சொல்ல வேண்டாம்
என்கிற வெறுப்பில்
எல்லாம் கதைகளையும்
தனக்குள்ளே
ஒளித்துக்கொண்டு
இரகசியமாய் நகர்கிறது
சுங்கை நதி.

வெளியே தெரிந்த
இறந்தவர்களின் கைகளில்
ஒட்டிக் கொண்டிருந்த
வறுமையும் கிழக்குக்கரையின்
சோகமும்
எப்படியும் வெளிப்பட்டன
மையமில்லாத வெறும் கதைகளாய்
அர்த்தமற்ற வெறும் நிகழ்வாய்
கதைப்பாத்திரங்களை இழந்த
வெறும் சூன்யமாய்.

சுங்கை நதி
எந்தச் சலனமுமின்றி
அடுத்த மழைக்காலம் வரும்வரை
தனக்குள்ளே பயணிக்கத் துவங்கியது.

கே.பாலமுருகன்

பூக்காரப் பாட்டியிடமிருந்த காலம்


எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு
பழைய வீடிருந்த
தோட்டத்திற்குச் சென்றிருந்தேன்.

பார்த்த இடங்களிலெல்லாம்
மாற்றங்கள் நினைவுகளைத்
தகர்த்திருந்தன.

முன்பிருந்த மாங்காய்
மரங்கள் அனைத்தும்
செத்திருந்தன.
பெருக்கெடுத்தோடும் ஆற்றில்
மரக்கட்டைகள் விழுந்து
அடைத்துக்கிடந்தன.

முனியாண்டி கோவில் பூசாரி
மாரியாத்தா கிழவி
பெரிய சைக்கிள் தாத்தா
ஒட்டுக்கடை பாட்டி என
எல்லோரும் அப்பொழுது இல்லை.
நான் அங்கில்லாத ஏதோ ஒரு காலத்தில்
ஏதோ ஒரு பொழுதில்
அவர்கள் எல்லோரும் இறந்து போயிருந்தனர்.

4 ஆம் எண் லயத்தில்
ஒரு வீடு மட்டும் தனித்திருந்தந்து
பூக்காரப் பாட்டியுடன்.
அவர் மட்டுமே என்னை ஞாபகப்படுத்திவிட்டால்
மீண்டும் நான் வாழ்ந்த தோட்டத்தின் ஆன்மாவைத்
திரும்பப் பெற்றதைப் போல இருக்கும்.

"பாட்டி நான் யார்ன்னு தெரியுதா?"
என்றேன் குதிகாலிட்டு வீட்டின் சூன்யத்தை
விழுங்கிக் கொண்டு தனிமையில்
அமர்ந்திருந்த பூக்காரப் பாட்டியிடம்.

"பாட்டி. .  தனப்பாக்கியம் மகன்..மூனாவது லயம்"
பூக்காரப் பட்டி இல்லாமல் போய்விட்ட
மூன்றாம் லயத்தின் அமைதியைக் கவனமாகப்
பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பினார்.

"ஓ நீயா? அந்த மேட்டு கெணத்துலெ
உழுந்து செத்துப் போய்ட்டியே. . நீதானே"
பாட்டி  மேட்டுக் கிணற்றில்
விழுந்து செத்துப்போன தன் மகனின்
இறப்பிற்குப் பிறகு
வேறு யாரிடமும் பேசியதில்லை.


கே.பாலமுருகன்

Thursday, January 6, 2011

கவிதை: பொம்மைகள் பிடிக்கும் என்கிற கொடூரம்

எல்லோரும் பொம்மைகளைத்தான்
வாங்கிக் கொடுத்து
என்னைப் பழக்குகிறார்கள்.

சில சமயங்களில் மிதிப்பட்டு
பல நேரங்களில் என்னால் கொடுமைப்படுத்தப்பட்டு
தேவைப்படாத பொழுதுகளில்
மூலைகளில் விசிறியடிக்கப்பட்டு
எனது முழுமையான கோபத்தையும்
அதிகாரத்தையும்
வெறுப்பையும்
அலட்சியத்தையும்
காட்டி காட்டி
சோர்வடையும்வரை
என்னை எதற்காகவோ
பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பொம்மைகளுடன் படுக்க வைத்து
அடம் பிடித்த சமயங்களில்
பொம்மையை என்னுள் திணித்து
காலுடன் சேர்த்துப் பொம்மையைக்
கட்டிப்போட்டு
மீண்டும் மீண்டும் ஒன்றும் செய்யாத
அந்தப் பொம்மையை நேசிக்க வைத்திருந்தார்கள்.

வீட்டின் ஏதோ சில பகுதிகளில்
இன்றளவும் பிய்த்து எறியப்பட்டுக்
கிடக்கின்றன
யார் யாரோ வாங்கிக் கொடுத்த
கரடி பொம்மைகளும்
நாய் பொம்மைகளும்.

ஒவ்வொன்றிலும்
நான் திரும்ப திரும்ப
எனக்குப் பொம்மைகள்
பிடிக்கும் என்கிற
கொடூரத்தை உணர்ந்து கொள்கிறேன்.

கே.பாலமுருகன்
மலேசியா

Saturday, October 30, 2010

கவிதை: நெடுக வளர்ந்திருப்பது சதை

இரைச்சி விற்பவனின்
கையில் சிக்கிக் கொண்ட
சதையை
துண்டு துண்டாக
அறுத்துக் கொண்டிருந்தான்.

முதல் துண்டு விழும்போது
இனத்தை
உறுதிப்படுத்திக்கொண்டான்.

இரண்டாவது துண்டு விழும்போது
நிறத்தை
உறுதிப்படுத்திக்கொண்டான்.

மூன்றாவது துண்டு
தரையில் விழுந்து
அவன் கால்களைச்
சுவைத்தது.

நான்காவது துண்டை
அவன் அறுக்கும்போது
மற்ற துண்டுகள்
காட்டிக்கொடுக்கப்பட்டன.

ஐந்தாவது துண்டுக்காக
அவன் கத்தியை
ஓங்கும்போது
மற்ற துண்டுகள்
அடிமையாகின.

ஆறாவது துண்டு
அவனுக்காகத் தலையை
எக்கி நீட்டியது.

ஏழாவது துண்டு
அவனைக் கும்பிட்டு
துதி பாடியது.

எட்டாவது துண்டு
அவனை வருடி
வழித்து சொறிந்து
மகிழ்ச்சிப்படுத்தியது.

ஒன்பதாவது துண்டு விழும்போது
இரைச்சி விற்பவனின்
முன்பாக வாலாட்டி வாலாட்டி
கோமாளி நடனம்
ஆடப்பட்டது.

பத்தாவது துண்டு விழுவதற்கு
முன்பாக
இரைச்சி விற்பவன்
மதிமயங்கி
கைத்தட்டினான்.

கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா

Friday, September 10, 2010

கவிதை: முடிவுறுதல்

எல்லாமும் தீர்ந்தவுடன்
முதலில் வருவது அச்சம்
பிறகொரு மௌனம்
இறுதியாக வெறுமை.

காட்சிகள் தீர்ந்தவுடன்
புகைப்படங்கள் சேகரிப்பதை
நிறுத்திக்கொண்டேன்.

முந்தைய புகைப்படங்களில்
தென்படும் எனது இருப்பை
ஒவ்வொன்றிலிருந்தும்
கழற்றி எறிகிறேன்.

காலியான இடங்களிலெல்லாம்
அங்கு இல்லாதவனைப் பற்றிய
அனுமானங்களும் சித்தரிப்புகளும்
பெருகத் துவங்கின.

தீர்ந்துபோன ஒருவனை
எந்த இடத்தில் வைத்து
எந்தத் திருப்பத்தில் வைத்து
எந்த வடிவத்தில் வைத்து
எந்த வர்ணத்தில் வைத்து
மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்
என்கிற தவிப்பும் பதற்றமும்
தண்டனையாக மீந்திருக்கிறது.

வசதிப்பட்டவர்கள்
தெரியாதவர்கள்
தெரிந்தவர்கள்
அந்நியர்கள்
உறவுக்காரர்கள்
நண்பர்கள்
என எல்லோரும்
காலியான புகைப்படங்களில்
தன்னை நிரப்பிக் கொண்டதும்
எல்லாமும் மீண்டும்
முடிவுற்றது.

கே.பாலமுருகன்
மலேசியா

Friday, July 23, 2010

நதியெனும் நதி

உன் கண்களுக்குள்
ஆழமாகச் சென்றுவிட்ட பிறகு
அது பெரும் நதியாய் மிதந்துகொண்டிருப்பதைக்
கண்டேன்.
நீந்துவதற்கான எந்த முனைப்புமின்றி
மிதத்தலில் நிலையுற்றேன்.
அலை அலையாய்
கனவுகளை அள்ளி வீசினாய்,
ஒவ்வொரு கனவின் முடிவிலும்
நீ கண்டு இரசித்த காட்சிகளின்
பிம்பத்தில் கரை சேர்ந்தேன்.
நீ கண் சிமிட்டும் போதெல்லாம்
மறுபடியும் பாய்ந்து காணாமல் போகிறேன்
உன் கண்களெனும் பெரும் நதிக்குள்.

-கே.பாலமுருகன்