Friday, February 19, 2010

ஒரு வானமும் சில மழைக்காலங்களும்

மூதாதையர்களின் சிரிப்பொலிகளை
இரவுநேர கதைகளை
ஜெனரேட்டர் ஒலிகளை
நெல்லிக்காய் மரத்திற்காக மழைக்காலத்தில்
வந்துசேரும் பறவைகளை
அடிக்கடி தவறவிடும் வெளிச்சங்களை
தாத்தாவின் குரட்டை சப்தங்களை
வெளிக்கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும்
அம்மாச்சியின் உடைகளை
மரத்தோம்பு வாளியின் நீர் மேற்பரப்பில்
எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை
எல்லாவற்றையும் விழுங்கிய மீதமாக
இறந்தகாலத்தின் ஓசைகளாக
இன்றும் நெளிகிறது ஒரு பழங்கிணறு.
நெல்லிக்காய் மரத்திலிருந்து
இன்று உதிரக்கூடும்
முன்பிருந்த
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
நாய்க்குட்டியும் நானும்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
                 மலேசியா

Friday, February 12, 2010

திரும்பவும் ஒரு பறவை

சுவர்களில் படிந்திருந்த
வெயிலை விழுங்கத் துவங்கினார்கள்
சில பரபரப்புகளுடனும் சில அவசரங்களுடனும்
ஒருவரை ஒருவர் கடந்து சென்று கொண்டிருந்த
நிர்பந்தத்தில்

நேற்றைய அனுபவங்களும் இரைச்சல்களும்
பெரும் கூச்சலுடன்
ஒரு பறவையைப் போல
நகரம் திரும்புகிறது

மீண்டும் முதலிலிருந்து
அடுக்கத் துவங்கினேன்
தொலைந்தவர்கள் பற்றியும்
தொலைத்தவர்கள் பற்றியும்

தவறவிட்ட
சிறகுகளையும் உறவுகளையும்
எடுத்துச் செல்ல
நகரத்திற்குள் வந்திருக்கும் பறவை
கொத்திக் கொத்தித் தின்றது
பரபரப்பையும் சாமான்யனின் அவசரத்தையும்

(2010- மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய கவிதை போட்டியில் முதல் பரிசும் எம்.ஏ இளஞ்செல்வன் கோப்பையையும் வென்ற கவிதை)

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

Tuesday, December 15, 2009

கவிதை: எதிர் அழகியல்

நெடுந்தூரப் பயணம்போல
நீண்டு கொண்டிருந்தது
எங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த உரையாடல்.


பெரும்பான்மை நுகர்வாளர்களின்
திருப்திக்குரிய பொருளாக மட்டுமே
கற்பிக்கப்பட்ட அழகியலை
உடைக்க நேர்ந்ததன்
விளைவுதான் எதிர் அழகியல்
எனக் கொண்டாடப்பட்டது.

என் முகங்களின் மீது
படர்ந்திருந்த பாவிக்கப்பட்டிருந்த
மேல்தட்டு அழகியலின் சாயல்கள்
மெல்ல உதிர்ந்தன
உரையாடலின் புரிதலைச் சாத்தியப்படுத்த.

சம்பாஷனைக்குப் பிறகு
விடைப்பெற்ற நண்பர்கள்
பாதைநெடுக கழற்றி எறிந்தார்கள்
அழகியலையும் அதன் முகமூடிகளையும்.
இப்பொழுது புதியதாக
ஓர் எதிர் அழகியல்.

ஆக்கம்
கே.பாலமுருகன்
மலேசியா

Monday, December 7, 2009

சிறுகதை: கடைசி பயணி மாரிமுத்து

‘24ஆம் எண் பேருந்து எல்லாரையும் சுமந்து கொண்டு வழக்கமான பாதையை நோக்கி நகர்ந்தது. மாரிமுத்து கிழவன் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். மிக கவனமாக வெளியே எறியப்படும் அவரது பார்வை பேருந்தின் நகர்விற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவறியப்படியே வந்தது.


"ஐயா. . .இந்தத் தோட்ட மாளிகை வந்துச்சின்னா கொஞ்சம் சொல்லிருப்பா"

அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் சொல்லி வைத்தார். எப்பொழுதும் பேருந்து பயணங்கள் அவருக்கு சந்தேகத்திற்குரியவை. உள்ளே ஏறியவுடன் யாரையாவது பிடித்துக் கொண்டு, இறங்குகிற இடம்வரை அவர் மீதே முழுமையான பயணத்தையும் ஒப்படைத்துவிடுவார்.

"தாத்தா. . .நான் சீக்கரம் எறங்கிடுவேன். . டிரைவர்கிட்ட சொல்லிட்டுப் போறேன். . அவரு சொல்லுவாரு எடம் வந்தோன. சரியா? அதுதான் கடைசி ஸ்தோப் போல. . "

பேருந்தை மல்லாந்து பார்த்துவிட்டு சந்தேகத்துடன் தலை ஆட்டிக் கொண்டார். முன்னால் டிக்கெட் துப்பும் இயந்திரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கும் சீன டிரைவரை ஒருமுறை பார்த்தார். அவன் பேசப் போகும் மலாய் இவருக்குப் பிடிப்படுமா என்பதில் புதியதாக ஒரு சந்தேகம் கிளைவிட்டது.

"ஓய் ஓராங் துவா செப்பாட் னைக்லா" (டே கெழவா சீக்கிரம் ஏறு) என வழக்கமாக எல்லாரும் கடிந்துகொண்டு தன் முதுமையின் மீது எறியும் வார்த்தைகள் அவருக்கு மேலும் பதற்றத்தை அளிப்பது போல, இந்தப் பயணத்தில்கூட அந்தச் சீன டிரைவர் இரைச்சலுக்கு மத்தியில் ஏதோ திட்டி வைத்தான். முதுமை இவர்களுக்கு ஒரு கேலிக்குரிய விஷயம்.

"டே கெழட்டு படுவா. . ஒழுங்க நிக்க தெரியாதா?" எப்பொழுதோ ஒர் இந்திய வாலிபன் அவசரத்தில் எரிந்து விழுந்தது திட்டு திட்டாக பேருந்தின் உரையாடல்களிலிருந்து இடறின. மாரிமுத்துவுடன் பயணத்தில் இருப்பவர்களின் முகங்கள் திடீரென பயங்கரமானவையாகவும் கொடூரமானவையாகவும் தெரிந்தது. இருக்கையின் விளிம்பில் தனது விழிப்புணர்வை ஒடுக்கிக் கொண்டார்.


பேருந்திலிருந்து ஒவ்வொருவராக வெவ்வேறு இடங்களில் இறங்கிக் கொண்டிருந்தனர். மாரிமுத்து மெல்ல எழுந்து பேருந்தின் வேகம் குறையும்வரை மேல் கம்பியைப் பிடித்து சமாளித்துக் கொண்டு ஓட்டுனர் அமர்ந்திருக்கும் இருக்கைக்குச் சென்றார்.

"அப்பே. . இத்து தோட்ட மாளிகை டத்தாங். . சயா துருன்லா. ." (தோட்ட மாளிகை வந்ததும் நான் இறங்க வேண்டும்)

"அப்பா இத்து? பகிதாவ் டாலாம் மெலாயுலா. . அப்பா தெம்பாட்?" (என்ன இடம்? மலாய்மொழியில சொல்லு)

"இத்து பங்குனான் லாடாங்" (தோட்ட மாளிகை என்று மலாயில்)

"யூ பி டுடுக்லா. . சயா ஜெரிட் டெங்கான் குவாட் குவாட். . . யூ புன்யா தெலிங்கா ரோசாக்கான்?" (போய் உட்காரு நான் வேகமா கத்தறேன், உன் காதுதான் கெட்டுப் போச்சே)

மாரிமுத்து தடுமாறினார். எல்லோரும் அவரைக் கேலியாக வேடிக்கை பார்த்தனர். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய ஆடவர் வேகமாகக் கத்தினார்.

"எங்க இப்படி? மார்க்கேட்டுக்காக. . . . "

"இல்லப்பா. . தோட்ட மாளிகைக்குப் போய்க்கிட்டு இருக்கன்..."

"அங்க என்ன இருக்கு? காசு தர்றாங்களா?"

"எஸ்.பி.எம் பரீட்சையில தமிழ் எழுக்க முடியாம போயிருமாம். . அதான் அங்க போராட்டம் நடத்தறாங்க. . அங்கன போய் ஏதோ நம்பளாலே முடிஞ்சதெ செய்லாம்னுதான்"

"நீங்க என்ன செய்யப் போறீங்க? போலிஸ்க்காரன் பிடிச்சி உள்ள வச்சான்னாதான் தெரியும். இருக்கறதும் இல்லாம போய்விடும். வீட்டுக்குப் போங்க"

"இல்ல. . . தமிழுப்பா. . போகனும்"

எல்லோரும் இறங்கிவிட்டப் பிறகு, பேருந்து தோட்ட மாளிகைக்குச் செல்லும் சாலையில் வலதுபுறமாக நின்றதும் மாரிமுத்து இறங்கினார்.

"கெழவன் எறங்குது பாரு. . சீக்கரம்!"

நன்றி: உயிரோசை வார இணைய இதழ்

ஆக்கம்: கே.பாலமுருகன்
                  மலேசியா
                
bala_barathi@hotmail.com

Saturday, November 14, 2009

சிறுகதை: வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை

1


மழைப் பொழுது. காரை நிறுத்திவிட்டு வங்கியின் திசை நோக்கி ஓடி வந்தவனின் கால்களில் ஈரம். உடலின் அசௌளகரிகங்களை வெளியே உதறி தள்ளிவிட்டு முன் கதவைத் தள்ளினான். வங்கியின் பணத்தை வெளியே துப்பும் இயந்திரங்கள் இலேசான மஞ்சள் விளக்கொளியில் ஒவ்வொருவனின் உருவங்களுக்குள்ளும் பதுங்கியிருந்தன.


வங்கியின் வெளிவரந்தாவில் படுத்திருந்தான் மாரிமுத்து. மேலாடையைக் கழற்றி அருகில் இருந்த நீர்க்குழாயின் மேற்பரப்பில் காயப் போட்டிருந்தான். வங்கிக்கு வந்தவர்களின் கால்களிலிருந்து ஒழுகிய நீர் அவன் தலைமாட்டில் குவியத்துவங்கியது. ஈரத்தை உணர்ந்தவன், கைகளைத் தூக்கி வேறு பக்கமாக வைத்துக் கொண்டு உறங்கத் துவங்கினான்.

வங்கியின் உள்ளேயிருந்து பார்க்கையில், கண்களைக் கூசும் மஞ்சள் ஒளியில் மாரிமுத்துவின் மெலிந்த தேகம் அருகாமையில் உள்ள தரையில் விழுந்து சுருங்கியிருந்தது. வெளியேயும் உள்ளேயும் ஓடி வருபவர்கள் அவன் நிழலை மிதித்துக் கொண்டிருந்தனர்.

2

வனிதா காரிலேயே கண்ணாடியின் வழியாக அப்பா வங்கியை நோக்கி ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மழை சொட்டு சொட்டாக வெளியை நனைத்துக் கொண்டிருந்தது. கண்ணாடியின் உடலில் வழுக்கி விழுந்த மழைத்துளிகளின் நெளிவைக் கைகளில் பிடிக்க முயன்றவளின் முகம் பிரகாசமாக இருந்தது.

வங்கியினுள்ளே பயங்கர கூட்டம். வனிதா உள்ளே எரிந்துகொண்டிருந்த மங்கிய மஞ்சள் விளக்கைப் பார்த்தபோது, மாரிமுத்து எழுந்து நீர்க்குழாயில் தொங்கிக் கொண்டிருந்த தனது சட்டையை எடுத்து உதறுவதையும் பார்த்தாள். இலேசான இருளும் மஞ்சளும் கலந்த ஒரு மாலை பொழுதின் வசீகரம் அவன் உடலைப் போர்த்தியிருந்தது. சட்டையை மாட்டிக் கொண்டு பெரிய சாலையை நோக்கி ஓடத் துவங்கினான் மாரிமுத்து.


3

மழைப் பொழுதில் உறக்கத்தைச் சாரல் நனைக்கிறது. ஏதோ ஓர் அசாதரண கனவிலிருந்து திடீரென்று அவசரமாக உள்ளே ஓடிவரும் ஒருவனால் தூக்கியெறியப்படுகிறேன். வங்கிக் கதவைத் திறக்கும் அவசரத்தில் கைப்பிடியை நழுவவிடுகிறான் ஒருவன். மழையின் துளிகளை அவசரமாக உதறிவிட்டுப் போகிறான் ஒருவன். மீதங்கள் ஒரு நதியைப் போல உருண்டு வருகிறது.

நீர்க்குழாயில் மாட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டேன். குளிர் உடல் முழுவதும் பரவியது. எங்கே போவதென்று தெரியாமல் வெளியே ஓடிவர, மழைச் சொட்டு சொட்டாகப் பெய்யத் துவங்கியது.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

Wednesday, November 4, 2009

கவிதை: எதிர் பிம்பம்




எதிர்பாராவிதமான சந்திப்புகளில்
கசியவிடும் துரோகங்களுக்குச்
சாட்சியமாக
விட்டு வருகிறேன்
எதிர் பிம்பத்தை
எல்லா இடங்களிலும்.

என்னைப் போன்ற
கண்கள் கால்கள்
கைகள் மூக்கு
மயிர் என
எதிர் பிம்பம்
சுயசிதைவிற்காகத் தயாராகியது.

எனக்கானவர்கள்
எனக்கு நெருக்கமானவர்கள்
நண்பர்கள் எதிரிகள்
துரோகிகள் வழிப்போக்கர்கள்
உறவுக்காரர்கள்
என எல்லோருக்கும்
திருப்தியளிக்கும் வகையில்
போலித்தனத்தின் உக்கிரத்தில்
மீண்டும் சாகவும் சிரிக்கவும்
உபசரிக்கவும் பம்மாத்துப் பண்ணவும்
கற்றுக் கொண்டது
எதிர் பிம்பம்.

எல்லாம் உடைவுகளுக்கும்
உடன்பட்டு
கரைந்துகொண்டிருந்தது.

கே.பாலமுருகன்
மலேசியா
நன்றி: உயிரோசை வார இணைய இதழ்

Thursday, October 29, 2009

கே.பாலமுருகன் கவிதைகள்


1
வர்ணங்களின் உதிர்தலுக்குப்
பிறகு
ஒரே எண்ணம்
ஒரே தோற்றம்
ஒரே பிம்பம்.
வெறுமை.

2
எனக்காக இருந்தவை
அனைத்தையும்
உனதாக்கிவிட்டு
மறைந்துவிடுகிறேன்
மலை இடுக்குகளில்
மழைத்துளிகளில்
வீட்டு அறைகளில்
இலைகளின் சுருளில்
இரவின் முணுமுணுப்பில்.

3
திரும்பவும் கேட்கின்றன
எப்பொழுதோ பேசிய
என் சொற்களின் ஒலி
அதே வெறுப்புடன்
அதே இயலாமையுடன்
அதே வலியுடன்.

கே.பாலமுருகன்
மலேசியா