Thursday, September 1, 2011

கவிதை: ஒரு புகைப்படத்தில் நிகழ்ந்த மரணம்


1
இப்பொழுது நீங்கள்
பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில்
முன்பொருமுறை நானும் இருந்தேன்.

2
புகைப்படத்தைப் பார்த்துவிட்டு
வைப்பதற்கு முன்பாக
நான் உங்களிடம் அதில் காணாமல் போயிருக்கும்
என்னைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

3
ஒரு புகைப்படத்திலிருந்து
காலியாவதை நான் எப்பொழுதும் விரும்பியதில்லை.
ஆனாலும் துரத்தப்படுவதற்கு முன்
வெளியேற வேண்டியுள்ளது.

Tuesday, August 2, 2011

கவிதை: சத்தத்தின் வரலாறு

இரண்டாம் உலகப் போரில்
குண்டு பாய்ந்து செத்தொழிந்துபோன
போர் வீரர்களின் சத்தங்கள்
என் அறைக்குள் கேட்கத் துவங்கியதுபோது
அன்று 15.07.2011.

வெகுநாட்களுக்குப் பிறகு
தேநீர் காய்ந்து போன
குவளையின் மூடியை அகற்றும்போது
அதிலிருந்து கேட்ட குரல்

Tuesday, June 21, 2011

கவிதை: போர் முடிந்தது

சுவரோரம் வந்து நின்ற
சிறுமியின் கால்களில்
ஒட்டியிருந்தது போர்.

பாத வெடிப்புகளில்
ஒளிந்திருந்தார்கள்
போர் வீரர்கள்.

தரைப்புழுதியிலிருந்து
போர் ஆரம்பமாகும்
எச்சரிக்கை.

Monday, May 16, 2011

கவிதை: மேசையின் மீதிருந்த வாக்கியம்

பருகிவிட்டு அரைநீருடன்
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.

நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.

Wednesday, April 20, 2011

கவிதை: நாட்டியம்

இரு பக்க புருவத்தையும் வளைத்து
கால்களை ஒருமுறை தரையில்
உதறிவிட்டு
என்னைப் பார்த்தாள்.

தொடை இரண்டையும்
மாற்றி மாற்றி அந்தரத்தில் வைத்து
உடலைச் சாய்த்தாள்.

பாடலின் ஒவ்வொரு முடிவிலும்
நிசப்தம் பரவ
அவளுடைய கண்கள்
உக்கிரமடைந்தன.

Saturday, March 26, 2011

கவிதை: சந்திப்பு

அப்புவின் விநோதமான
செயல்களும் பறவைகள்
இறந்துபோகும் காலமும்
ஒன்றாக நிகழ்ந்தன.

தலையையும் கழுத்தையும்
திக்கில்லாமல் சடசடவென
திருப்பிக் காட்டுகிறான்.

வயிறை உப்பி கைகளை மடக்கி
காலால் ஓங்கி நடக்கிறான்.

மரக்கிளையில் வந்தமரும்
பறவைகளை ஒலியால்
கொல்வதைப் பற்றி
பேசுகிறான்.

இரவில் அவனுடய
முனகல் பறவையின்
பேரிரைச்சலாக மாறுகிறது.

தோளின் இரு பக்கங்களிலும்
போர்வையைக் கட்டிக்கொண்டு
உயரத்திலிருந்து குதிக்கிறான்.

அவனது அறைக்குள்ளிருந்து
சுவரைக் கொத்தும்
ஒலி அபாரமாக ஒலிக்கிறது.

திடீரென
வீட்டைப் பார்த்து
விசித்திரமாக மிரள்கிறான்.

அப்பு காணாமல் போய்
இரண்டுநாளுக்குப் பிறகு
அவனுடைய அறையில்
நெல்மணியும் ஒரு சில இறகுகளும்
கிடந்தன.

கே.பாலமுருகன்

Wednesday, March 23, 2011

கவிதை: கொலையுணர்வு

கைக்கு எட்டாத கரும்பலகை
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.

ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின் பாதி
உடல் அழிக்கப்படுகிறது.

எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.

உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.

கடைசி சொல்லின்
உடலை அடையும்வரை
சோர்வில்லை விலகலுமில்லை.

கரும்பலகையின் கோடியில்
மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை
அழித்துவிட்டப் பிறகு
சிறுமியின் முகத்தில்
போர் முடிந்த களைப்பு.

கே.பாலமுருகன்