Sunday, September 11, 2011

கவிதை: கடைசி முத்தம்

கடைசி முத்தம்
கொடுக்கும்போதும்
பெறும்பொழுதும்
நடுக்கமாக இருக்கிறது.

கடைசி முத்தத்தில் ஈரத்தைவிட
பயமும் வலியும் துயரமும்
நிரம்பியிருக்கின்றன.


அதனை நிறைவேற்ற
நெருக்கமாகும் அவர்களின்
மூச்சிரைப்பில்
குரூரமும் ஒழுங்கற்ற பதற்றமும்
தெரிகின்றன.

கடைசி முத்தத்தைப்
பதுக்கி வைப்பவர்களும்
கடைசி முத்தத்தை எதிர்க்கொண்டவர்களும்
ஒரு குற்றத்திற்கு ஆளானவர்களைப் போல
நெகிழ்கிறார்கள் அல்லது
ஒரு கொலையைச் செய்துவிட்டவர்கள் போல
தலைமறைவாகிறார்கள்.

கடைசி முத்தத்தின்
ஆழத்தைக் கண்டடைந்தவர்கள்
அதில் துரோகத்தையும்
நேசித்தவர்களின் புன்னகையையும்
ஒன்றாகத் தரிசிக்கும் சாபத்திற்கு
ஆளானார்கள்.

அதன் பிறகு
கடைசி முத்தம்
நேசிக்கப்படவிடுவதில்லை.

கே.பாலமுருகன்

No comments: