Tuesday, September 15, 2009

சிறுகதை: வெள்ளத்தில் கரைந்த அடையாளம் (உயிரோசை கதை)


1
தற்செயலாக ஒவ்வொரு மழைப்பொழுதின் இரவிலும் தூக்கத்திலிருந்து எழுந்துவிடும்போது உடல் வியர்த்திருக்கும். அன்று விழித்தெழுந்தபோது ஜூலை மாத மழைக்காலத்தின் குளிர் காற்று உள்ளே நுழையாதபடி அறைக்குள் நிரம்பியிருந்தது குள்ர்சாதனத்தின் குளுமை. வெளியில் மழைப் பெய்து கொண்டிருக்கும் போது நிம்மதியாக உறங்க முடிவதில்லை.

“இராத்திரிலே மழை பேஞ்சா சும்மா போத்திக்கிட்டு படுத்து ஜம்முனு தூங்கலாம்” என்று யாராவது சொன்னால் அவன் முகத்தில் கைமுட்டியைக் கொண்டு இடிக்க வேண்டும் போல தோன்றும்.

அறைக்கதவைத் திறந்ததும் முதலில் தரையைத்தான் பார்ப்பேன். பிறகு அம்மாவின் அறையை எக்கிப் பார்ப்பேன். கதவு மூடப்பட்டு எந்தச் சலனமும் இல்லாமல் இருக்கும். மழையின் சத்தம் அதிகரிக்கும்போது அம்மாவும் வெளியில் வந்து சன்னலைத் திறந்து வெளியே பார்ப்பார். எங்கள் மழை இரவுகளில் வாடிக்கையாக நிகழும் உறக்கக் களைதல் இவை.

“இந்நேரம் அந்த வீடுன்னா வெள்ளம் ஏறியிருக்கும்டா”

அவருக்குள்ளாகாவே வார்த்தைகளை விழுங்கிவிட்டு உள்ளே போய்விடுவார்.
மறுநாள் காலையில் பழைய வீட்டைப் பார்க்க வேண்டும் என்பது போலிருந்தது. 11 வருடம் வாழ்ந்துவிட்டு ஒரு மாபெரும் வெள்ளத்தில் அல்லது தொடர் மழைக்காலத்தில் தொலைத்துவிட்ட வீடு.
ஒவ்வொருமுறையும் கம்போங் கெர்பாவ் என்ற அடையாளபலகையைப் பார்க்கும்போதெல்லாம் மனம் வெறுமைக்கொள்ளும். பழைய வீட்டைப் பார்ப்பதில் நமக்குள் ஏற்படும் ஆசுவாசங்களுக்கும் வலிகளுக்கும் வார்த்தைகளே கிடைக்காது.

பெரிய சாலையிலிருந்து 4 அடி தள்ளி குறுகலான சந்திற்குள் நுழையும் ஒரு பாதை. பாதை முழுக்க ஆற்றுநீர் ஓடிய வடு. எங்கோ ஒரு வடுவின் நெளிவில் எனது பாதம் அல்லது அப்பாவின் பாதம் ஒளிந்திருக்கலாம் அல்லது அமிழ்ந்து போயிருக்கலாம். பழைய வீட்டை நோக்கி ஓடும் பாதைக்கு சில மௌளனங்களும் சில வெறுமைகளும் இருக்கவே செய்தன.


இடிந்த வீடுகளுக்குள் பரவலாக விரிந்து கோடுகள் போட்டிருந்தன வெயில். பெரும்பாலான வீட்டின் முன்பக்கத்தில் ஆற்று மண் குவிந்திருக்க அதில் படிந்திருந்த தூசுகளுக்குள் விவரிக்க முடியாமல் போன ஒரு மழைக்காலமும் வெள்ளமும் நிசப்தித்துக் கிடப்பது போல இருந்தது.


“அப்பா. . ஒங்க சப்பாத்தி தண்ணில அடிச்சிக்கிட்டு ஓடுது பாருங்க, பிடிங்க. . ம்ம்மா. . ””

“டே குமாரு. . என்னா வெள்ளமா? தண்ணில ஆட்டம் போடறியா?”
எனக்குள் சேமிக்கப்பட்டிருந்த மழைக்கால வார்த்தைகள் மெல்ல எட்டிப் பார்த்தன. அப்பாவிடம் சொல்ல முடியாமல்போன சில புகார்கள் மழையின் இரைச்சலில் வெள்ளத்தின் பரபரப்பில் காற்றில் பறக்கவிட்ட சில வார்த்தைகள் தரையில் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து சிதறின.

கம்போங் கெர்பாவ் 28-ஏ ஆம் நம்பர் வீடு. முன்கதவும் ஜன்னலும் இடிந்து புறவாசலில் சரிந்து கிடந்தன. உள்ளே எல்லாம் பலகைச் சுவர்களும் காணாமல் போயிருந்தன. வெற்று உடலுடன் நிர்வாணமாய் நின்றிருந்தது பழைய வீடு. அம்மாவும் நானும் வெள்ளத்திற்கு அஞ்சி ஏறி நின்ற பலகை மட்டும் அதே இடத்தில் இரு சுவர்களுக்கும் மத்தியில் பிடிப்புடன் இருந்தது.
2

சீன அப்பே வரும்வரை சேகர் மாமாவும் தாங் அங்கிளும் வெகுநேரம் மழையிலேயே நின்றிருந்தார்கள். அப்பா எங்களை வீட்டிற்குள்ளேயே உயரமான பலகையின் விளிம்பில் அமர வைத்துவிட்டு முன்கதவைச் சாத்திவிட்டார். கதவைத் தள்ளிக்கொண்டு ஆற்றுநீர் சலசலவென சந்துகளின் ஊடே வழிந்து கொண்டிருந்தாலும் விஷ பாம்புகளோ பூராணோ வருவதற்கு வாய்ப்பில்லை.

“டே. .காலையும் சூத்தையும் வச்சிக்கிட்டு ஒழுங்கா அங்கயே இரு, தண்ணீ முட்டிவரைக்கும் வந்திருச்சி”

வீட்டிற்கு மேற்கு பகுதியில் கரையைக்கூட எட்டாத வண்ணம் மேற்பரப்பில் வெறும் மதிய வெயிலை நெளியவிடும் “சீனக் கம்பத்து ஆறு”, இப்பொழுது எங்கள் வீட்டின் தரையை ஐந்தாவது முறையாக தழுவிக் கொண்டு கருமையான நிறத்தில் ஒருசில மர்மங்களை உள்ளிழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. முன்வாசல் கதவின் இறுக்கங்களைத் தளர்த்த முயன்று முட்டிக் கொண்டு இருந்தன ஆற்றுநீர்.

“ம்ம்மா தண்ணீ எப்ப போவும்?”

“இப்படி வெள்ளம் ஏறும்னு முன்னயே தெரியாமே போச்சே, , சீனன் சேவா காசு வாங்க மட்டும் வந்திருவான் கரட்டா, சனியன் பிடிச்சவன். . காசு தராங்கனு சொல்லுவான். . ஆனா வாங்கித் தரமாட்டான் கழிச்சில போறவன்”

அம்மா பலகையின் மேல் ஏறி நின்றுகொண்டு வீட்டிற்கு வெளியில் பார்த்தார். சேகர் மாமாவிற்கும் பக்கத்து வீட்டுச் சீனனுக்கும் அநேகமாகச் சண்டை வந்துவிடலாம் என்று பயந்துகொண்டிருந்தார்.

“ஏய் ராதா. . அவன உள்ளே வந்துரே சொல்லு. . எதுக்குப் பெரச்சன? சீனன் வந்தான்னா அவன்கிட்ட கேட்டுக்கலாம், இவன் என்னா பண்ணுவான்?”

சேகர் மாமாவும் தாங் அங்கிளும் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவரின் தலை உச்சியிலிருந்தும் மழைநீர் ஒழுகி வாயில் சிக்கிக் கொண்டது. அதை வெளியே துப்பிவிட்டு சேகர் மாமா வெள்ளத்தின் மேற்பரப்பை ஓங்கி எத்துவதன் மூலம் தனது வெறுப்புணர்வைக் காட்டினார்.

நாங்கள் வசித்து வந்த சீன கம்பத்திற்கு மற்றுமொரு பெயர் இருக்க நேர்ந்தது. “கம்போங் கெர்பாவ்”. எருமைகள் மேயும் கம்பம் என்று சீனர்கள் சொல்வார்கள். ஒரு காலத்தில் இங்கு வசித்த ஆற்றோர குடியிருப்புவாசிகள் எருமைகளை வளர்த்தார்கள் என்றும், அவர்கள் எருமைகளைக் கொண்டுவரும் பாதையின் விளிம்புகளில்தான் இந்தச் சீனக் கம்பம் உருவாகி இருப்பதால் அதற்கு “கம்போங் கெர்பாவ்” என்ற பெயரும் வந்துவிட்டதாம்.

அப்பா இரவில் வேலை முடிந்து வரும் வழியில் இந்தக் கமபத்தின் ஆற்றோரம் சில எருமைகள் மேய்வதையும் அந்த எருமைகளுக்கு மத்தியில் யாரோ ஒரு அப்பே கிழவன் நடமாடுவதையும் பார்த்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அது அப்பாவின் பிரமையாக இருந்திருக்கலாம்.

வெள்ளத்தின் அடர் ஓட்டத்திலும் சிலர் தண்ணீரின் மேற்பரப்பில் எருமை மாடுகளின் தலைகள் மிதந்து வருவதாகக் கூறியபோது சிறு பரவசம் ஏற்படத் துவங்கின. ஆனால் அது பற்றி எவ்வித கவலையும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம் பெரிய பாதையின் சாக்கடையிலிருந்து உடைந்து வீடுகளுக்குள் புகுந்துகொண்டிருந்தன.

இரவில் சப்தமின்றி இருள் மிதந்துகொண்டிருக்க அம்மாவும் நானும் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்துக் கொண்டு ஈரம் காய்ந்த ஆடைகளுடன் பலகையில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அமர்ந்திருக்கும் பலகை இரண்டாவது அறையில் இருப்பதால் அதில் உயரமாக நின்று கொண்டு எக்கிப் பார்த்தால் பக்கத்து அறையும் வீட்டிற்கு வெளியேயும் தெரியும்.

அப்பா மோட்டாரைத் தள்ளிக் கொண்டு போய் மேட்டுப் பகுதியில் வைத்துவிட்டு கால் சட்டையை முட்டிவரை மடக்கி ஒதுக்கி வைத்துவிட்டு வெள்ளத்தில் நடந்துவரும் போதெல்லாம் தூரத்திலிருந்து அப்பாவின் வருகையை என்னால் உறுதி செய்ய இயலும். ஒவ்வொருமுறையும் அவர் அப்படித்தான் வந்துவிட்டு எங்கள் இருப்பை உறுதி செய்துவிட்டுச் செல்வதோடு நாசி லெமாக் அல்லது ரொட்டி சானாய் பொட்டலத்தைத் தந்துவிட்டுப் போவார். எனக்குச் சாப்பிட விருப்பம் இருக்காது. அம்மா என் வாயில் வலுக்கட்டாயமாகத் திணிக்க முயலும்போதெல்லாம் அவரின் கைகளில் ஆற்றுநீரின் வாசம் வீசிக் கொண்டிருக்கும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா 300 ரிங்கிட் தரப்போவதாக மாநில அரசாங்கத்திடமிருந்து தகவல் வந்திருப்பதாகக் கம்பத்தில் பேசிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இது குறித்து சீனர்கள் மத்தியில் பேசப்படும். ஆனால் அப்பா அதைப் பற்றித் தெரிந்துகொள்ளாதவராக இருந்துவிட்டதால் எங்களுக்கு அந்த 300 ரிங்கிட் கிடைத்ததில்லை. மேலும் அங்குள்ள யாருக்கும் அந்த 300 ரிங்கிட் கிடைக்கவும் இல்லை என்று பின்னாளில் கேள்விப்பட்டதுண்டு.

சீனர்களின் கலாச்சார கலைப்பாடுகள் கம்போங் கெர்பாவ் வீட்டின் அமைப்புகளில் இருந்தன. அவர்களின் சாமி படங்கள் வைப்பதற்காகவே வீட்டின் முன்பகுதியில் சுவரோடு தூக்கி நிறுத்தியிருக்கும் பலகை சாமி மேடையும், ஊதுபத்திகளைச் சொருகி வைக்க வீட்டின் பல இடங்களில் முக்கோண வடிவத்திலான சுவரோடு ஒட்டியிருக்கும் சிவப்பு நிற சிறு பெட்டியும் இருக்கும். அந்தக் கம்பத்தில் 64 சீனக் குடும்பங்களும் 2 தமிழ் குடும்பங்களும் வசிக்க, சீனர்களின் பெறுநாள் காலங்களில் எங்காவது தொலைந்து போனால்தான் அன்றைய பொழுதைச் சரிகட்ட இயலும்.
ஒன்று எங்கள் குடும்பம் மற்றொன்று சரசு அக்காவின் குடும்பம். அவரின் கணவன் எங்கேயோ ஓடிவிட்டதால், அவரே கையுறை தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டார்.

முன்வீட்டுச் சீனன் எப்பொழுதும் சரசு அக்காவின் குழந்தைகளைப் பார்த்தால் ஏதாவது பொருளைக் கொண்டு அடித்துத் துரட்டுவான். அவன் வளர்த்து வைத்திருக்கும் செடிகளில் மூத்திரம் பெய்வதற்காகவே அவர்கள் வருகிறார்கள் என்கிற புலம்பலும் அவனிடமிருந்து வரும். சரசு அக்காவின் குழந்தைகளில் ஒருவனுக்கு 4 வயது, மற்றொருவனுக்கு 6 வயது மற்றும் ஒரு பெண் குழைந்தைக்கு 3 வயது. பெண் குழந்தை பெரிய அண்ணனின் இடுப்பில் அரைநிர்வாணமாக அமர்ந்து கொண்டு வெயிலில் கருத்துப் போயிருக்கும். அதைத் தூக்கிச் சுமந்து கொண்டு கம்பம் முழுக்க அவர்கள் திரிந்து கொண்டிருப்பார்கள். யாரும் விளையாட கிடைக்காத பொழுதுகளில் கம்பத்தின் கிணற்றடியில் உட்கார்ந்துகொண்டு அவர்களே ஒரு விளையாட்டை விளையாடத் துவங்குவார்கள்.

அம்மாவும் என்னை அவர்களுடன் விளையாட அனுமதித்தது கிடையாது. வெள்ளக் காலத்தின் போது அவர்களின் வீடு முழுவதும் அடித்துக் கொண்டு போய்விட்டதாகக் கேள்விப்பட்டபோது பகிரென்றிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் அங்கிருந்து கையில் கிடைத்த பொருட்களைத் தூக்கிக் கொண்டு எங்கேயோ போய்விட்டதாக அம்மா சொன்னார்.

“சரசு அக்கா பிள்ளைங்க இப்பெ என்னா பண்ணிக்கிட்டு இருப்பாங்கமா?”

வெளியில் சேகர் மாமாவிற்கும் சீனனுக்கும் வாய்ச்சண்டை வலுத்து கைகளப்பாகியிருந்தது. இருவரும் சட்டைகளைப் பிடித்துக் கொண்டு உருளுவதற்கு மல்லுக் கட்டிக் கொண்டு போராடிக் கொண்டிருக்கும்போதே சிலர் வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டார்கள். அப்பொழுது பக்கத்து வீட்டு சீனனின் மூத்த மகன் வெளியில் வந்து சத்தமாகக் கத்தினான்.

“ஏய் இந்தியா. . கெலுவார்லா” (ஏய் இந்தியா. . வெளியேறு)


3

இங்கிருந்த சீனர்கள் எல்லோருக்கும் மலிவு அடுக்குமாடி வீடுகள் கிடைத்ததாகவும் எல்லோரும் அங்கே சென்றுவிட்டதாகவும் முன்பே தெரிய வந்தது. அந்தக் கம்பத்தில் வாழ்ந்த இரு இந்திய குடும்பங்கள் அங்கு வாழ்ந்ததற்கான எந்த உரிமையும் அடையாளமும் இல்லாமல் போனதைப் பற்றி அப்பாவும் கவலைப்பட்டதில்லை.

இப்பொழுதும் யாராவது நண்பர்களை அழைத்து வந்து, “இது நாங்க இருந்த வீடு” என்று காட்டினால்,

"ஏய் இந்தியா. . இனி ரூமா சீனாலா. . இனி கம்போங் சீனாலா” (டே இது சீன வீடுடா. . இது சீனக் கம்பம்” என்று சொல்லக்கூடும்.


-முடிவு-
நன்றி : உயிரோசை வலைத்தலம்


கே.பாலமுருகன்
சுங்கைப்பட்டாணி, மலேசியா
bala_barathi@hotmail.com