Saturday, March 26, 2011

கவிதை: சந்திப்பு

அப்புவின் விநோதமான
செயல்களும் பறவைகள்
இறந்துபோகும் காலமும்
ஒன்றாக நிகழ்ந்தன.

தலையையும் கழுத்தையும்
திக்கில்லாமல் சடசடவென
திருப்பிக் காட்டுகிறான்.

வயிறை உப்பி கைகளை மடக்கி
காலால் ஓங்கி நடக்கிறான்.

மரக்கிளையில் வந்தமரும்
பறவைகளை ஒலியால்
கொல்வதைப் பற்றி
பேசுகிறான்.

இரவில் அவனுடய
முனகல் பறவையின்
பேரிரைச்சலாக மாறுகிறது.

தோளின் இரு பக்கங்களிலும்
போர்வையைக் கட்டிக்கொண்டு
உயரத்திலிருந்து குதிக்கிறான்.

அவனது அறைக்குள்ளிருந்து
சுவரைக் கொத்தும்
ஒலி அபாரமாக ஒலிக்கிறது.

திடீரென
வீட்டைப் பார்த்து
விசித்திரமாக மிரள்கிறான்.

அப்பு காணாமல் போய்
இரண்டுநாளுக்குப் பிறகு
அவனுடைய அறையில்
நெல்மணியும் ஒரு சில இறகுகளும்
கிடந்தன.

கே.பாலமுருகன்

Wednesday, March 23, 2011

கவிதை: கொலையுணர்வு

கைக்கு எட்டாத கரும்பலகை
சொற்களை எகிறி குதித்து
அழிக்க முயல்கிறாள்
சிறுமி.

ஒவ்வொருமுறையும்
கால்கள் தரையைத் தொடும்போது
சொற்காளின் பாதி
உடல் அழிக்கப்படுகிறது.

எட்டாத சொற்களின்
மீத உடலைச் சிதைக்க
மீண்டும் குதிக்கிறாள்.

உடலின் மொத்தப்பலத்தை
கால்களில் திரட்டி
பாய்கிறாள் ஆவேசம்கொண்டு.

கடைசி சொல்லின்
உடலை அடையும்வரை
சோர்வில்லை விலகலுமில்லை.

கரும்பலகையின் கோடியில்
மிச்சமாக இருந்த ஒரு எழுத்தை
அழித்துவிட்டப் பிறகு
சிறுமியின் முகத்தில்
போர் முடிந்த களைப்பு.

கே.பாலமுருகன்