Saturday, November 14, 2009

சிறுகதை: வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை

1


மழைப் பொழுது. காரை நிறுத்திவிட்டு வங்கியின் திசை நோக்கி ஓடி வந்தவனின் கால்களில் ஈரம். உடலின் அசௌளகரிகங்களை வெளியே உதறி தள்ளிவிட்டு முன் கதவைத் தள்ளினான். வங்கியின் பணத்தை வெளியே துப்பும் இயந்திரங்கள் இலேசான மஞ்சள் விளக்கொளியில் ஒவ்வொருவனின் உருவங்களுக்குள்ளும் பதுங்கியிருந்தன.


வங்கியின் வெளிவரந்தாவில் படுத்திருந்தான் மாரிமுத்து. மேலாடையைக் கழற்றி அருகில் இருந்த நீர்க்குழாயின் மேற்பரப்பில் காயப் போட்டிருந்தான். வங்கிக்கு வந்தவர்களின் கால்களிலிருந்து ஒழுகிய நீர் அவன் தலைமாட்டில் குவியத்துவங்கியது. ஈரத்தை உணர்ந்தவன், கைகளைத் தூக்கி வேறு பக்கமாக வைத்துக் கொண்டு உறங்கத் துவங்கினான்.

வங்கியின் உள்ளேயிருந்து பார்க்கையில், கண்களைக் கூசும் மஞ்சள் ஒளியில் மாரிமுத்துவின் மெலிந்த தேகம் அருகாமையில் உள்ள தரையில் விழுந்து சுருங்கியிருந்தது. வெளியேயும் உள்ளேயும் ஓடி வருபவர்கள் அவன் நிழலை மிதித்துக் கொண்டிருந்தனர்.

2

வனிதா காரிலேயே கண்ணாடியின் வழியாக அப்பா வங்கியை நோக்கி ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மழை சொட்டு சொட்டாக வெளியை நனைத்துக் கொண்டிருந்தது. கண்ணாடியின் உடலில் வழுக்கி விழுந்த மழைத்துளிகளின் நெளிவைக் கைகளில் பிடிக்க முயன்றவளின் முகம் பிரகாசமாக இருந்தது.

வங்கியினுள்ளே பயங்கர கூட்டம். வனிதா உள்ளே எரிந்துகொண்டிருந்த மங்கிய மஞ்சள் விளக்கைப் பார்த்தபோது, மாரிமுத்து எழுந்து நீர்க்குழாயில் தொங்கிக் கொண்டிருந்த தனது சட்டையை எடுத்து உதறுவதையும் பார்த்தாள். இலேசான இருளும் மஞ்சளும் கலந்த ஒரு மாலை பொழுதின் வசீகரம் அவன் உடலைப் போர்த்தியிருந்தது. சட்டையை மாட்டிக் கொண்டு பெரிய சாலையை நோக்கி ஓடத் துவங்கினான் மாரிமுத்து.


3

மழைப் பொழுதில் உறக்கத்தைச் சாரல் நனைக்கிறது. ஏதோ ஓர் அசாதரண கனவிலிருந்து திடீரென்று அவசரமாக உள்ளே ஓடிவரும் ஒருவனால் தூக்கியெறியப்படுகிறேன். வங்கிக் கதவைத் திறக்கும் அவசரத்தில் கைப்பிடியை நழுவவிடுகிறான் ஒருவன். மழையின் துளிகளை அவசரமாக உதறிவிட்டுப் போகிறான் ஒருவன். மீதங்கள் ஒரு நதியைப் போல உருண்டு வருகிறது.

நீர்க்குழாயில் மாட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டேன். குளிர் உடல் முழுவதும் பரவியது. எங்கே போவதென்று தெரியாமல் வெளியே ஓடிவர, மழைச் சொட்டு சொட்டாகப் பெய்யத் துவங்கியது.

கே.பாலமுருகன்
மலேசியா
bala_barathi@hotmail.com

No comments: