Tuesday, August 25, 2009

உதிர்வது ஒரு அசம்பாவிதமல்ல


உதிர்வது அவ்வளவு
கடினமான காரியமல்ல.
அல்லது அலட்சியமான
ஓர் துர்சம்பவத்திற்கான
பிரயாசையுமல்ல.

உதிர்வது எளிதில்
நடந்துவிடக்கூடியது.
மயிர்போல உதிர்த்துவிடப்படுவது
அல்லது இலைக்கு நிகரான சராசரி உதிர்வின் உச்சமுமாக
ஒலியிலிருந்து சொற்கள் உதிர்வதுபோல
உடலிலிருந்து வயது உதிர்வதுபோல
கண்களிலிருந்து வெளிச்சம் உதிர்வதுபோல
பிடிகளிலிருந்து தளர்ந்து வீழ்வதன் சூட்சமமென
எல்லாமும் ஒரு பிடிகளுக்குள் சிக்கித்தவிக்கும் நிதர்சனத்திற்காக
ஒன்றையொன்று உதிர்த்துக்கொள்வதன் மூலம்
படைப்பின் வேர்களைக் கடந்து செல்ல.

உதிர்வது மிக இரகசியமானது.
ஒரு இலையின் சிறு நுனி காம்புகளில்
ஒளிந்து கிடக்கும் அல்லது
மழைத்துளியின் விளிம்பு சொட்டுகளில்
தளர்ந்திருக்கும்.
உதிர்வு ஒரு அசம்பாவிதம் அல்ல.
உயிர்களுக்குள் உயிர்களுக்கு வெளியில்
பிரபஞ்சகளில் பிரபஞ்ச வெளிக்குள்
நிகழும் சராசரி.

கே.பாலமுருகன்
உயிரோசை - Uyirosai

No comments: