Wednesday, September 30, 2009

“வரக் காப்பியும் கீழ் கதவும்”-1970கள்-ஸ்காப்ரோ தோட்டம்

தாத்தா வீடு மட்டும் அந்த லயத்தில் தனி வீடுதான். பார்ப்பதற்கு இரண்டு ஒட்டிய வீட்டையும் ஒன்றாக சேர்த்து இணைத்துக் கட்டியது போல கொஞ்சம் பெரியதாகத் தெரியும். முன் வாசலில் நுழைந்தால் 5வினாடியிலேயே பின் வாசல் பக்கமாக வெளியேறிவிடலாம். 2ஆம் நம்பர் தோட்டத்து வீடுகள் மிகவும் சிறியது, மேலும் கதவுகள் இரண்டாகத் திறந்து கொள்ளும் வசதிகள் நிறைந்தது என்றெல்லாம் உமா அக்காள்தான் பிறரிடம் பெருமை அடித்துக் கொண்டிருப்பாள்.

கதவுகள் இரண்டு பிளவுகளாக இருக்கும். கீழ் கதவைச் சாத்தி வைத்து விட்டு வெளிச்சத்திற்காக மேல் கதவைத் திறந்து விட்டுக் கொள்ளலாம். பெரும்பாலும் நான் தாத்தா வீட்டில் இருந்த சமயத்திலெல்லாம் கீழ் கதவு எப்பொழுதும் சாத்திதான் கிடக்கும். அந்த 5 வயதில் கீழ் கதவின் உயரத்தைக் கடந்து போவதென்று எனக்குச் சாத்தியமற்றதாக அமைந்தது.

“டேய் கதவு மேல ஏறன, தாத்தாகிட்ட சொல்லி நெல்லிக்காய் மரத்துல கட்டி ஏத்திற சொல்லிடுவேன். புரியிதா?”

கீழ் கதவில் கைகள் இரண்டையும் தொங்கவிட்டுக் கொண்டு, வெளியே போய் கொண்டிருக்கும் அக்காவைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். அக்காள் அங்கம்மா வீட்டுக்குத்தான் போகிறாள். மதியம் 1மணிக்கு மேல் அவளுக்காக அங்கு ஒரு கூட்டமே காத்துக் கிடக்கும்.


5ஆம் நம்பர் காலி வீட்டில் எல்லோரும் ஒன்று கூடுவதுதான் முதல் சந்திப்பு. பிறகுதான் சரளி மாமா வீட்டுப் பக்கமாகக் கூட்டம் நகர்ந்து செல்லும். அந்த வீட்டின் பின்புறத்தில்தான் அக்காளும் அவரின் நண்பர்களும் பல்லாங்குழி, நொண்டி விளையாட்டு, கித்தா கொட்டையில் துரட்டிப் பிடித்து அடித்தல் போன்ற விளையாட்டெல்லாம் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

மாலை மணி 3க்குள் அக்கா வீடு வந்து சேர்ந்து விட வேண்டும் என்பதுதான் தாத்தாவின் ஆணையாக இருந்தது. அதன்படி எது நடந்தாலும் உமா அக்காள் மட்டும் 3மணிக்கு வீட்டில் இருந்துவிடுவாள். அக்காள் வீடு வந்து சேரும் போது சில சமயம் நான் அந்தக் கீழ் கதவோரமாகவே உறங்கிக் கிடப்பதுண்டு. அவள்தான் என்னைத் தூக்கி வாங்கில் போடுவாள்.

“இது ஒன்னு, எப்ப பாத்தாலும் இந்தக் கதவாண்டே தூங்கி தொலையுது. யேன் பாட்டி கொஞ்சம் தூக்கி அங்கன போட வேண்டியதுதானே?”

“அட போடி இவளே, குனிஞ்சா மறுபடியும் ஏஞ்சிருக்க முடியுமானே தெரியல, இதுல நான் இவன தூக்கி அங்கன போட்டனா, நான் இங்கன வுழுந்து கெடப்பேன், பரவாலயா?”

“நீ இருக்கியெ, இவனுக்கு மேல, எல்லா வேலயும் நாந்தான் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யனும்.”

பாட்டி எப்பொழுதும் அப்படித்தான். மாரியாயி பாட்டி எழுந்து நிமிர்ந்து நடந்து நான் பார்த்தது குறைவுதான். செவனேனு அமர்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ராஜ்யம் நடத்திக் கொண்டிருப்பாள். அக்காள் அதன் பிறகு வீட்டின் குசுனி பக்கமாகப் போகிறவள்தான், வேலையெல்லாம் முடித்துவிட்டுத் திரும்பி வரும் போது சூரிய வெளிச்சம் கீழ் கதவில் ஒளிந்து மறைய தயாராகிக் கொண்டிருக்கும். அக்காள் கீழ் கதவைத் திறந்துவிட்டு, மேல் கதவைக் கொஞ்ச நேரத்திற்குச் சாத்துகிறாள் என்றால், வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்ய போகிறாள் என்பதை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

“டேய், அங்கனயே வாங்கு மேலயெ படுத்துரு. கீழ எறங்கி வந்தெ தாத்தாகிட்ட சொல்லி ஒன்ன நெல்லிக்காய் மரத்துலெ கட்டித் தொங்க வுட்டுருவேன்”

உமா அக்காவிற்குத் தெரிந்ததெல்லாம் இந்த நெல்லிக்காய் மரமும் அதில் என்னைத் தொங்கவிடுவதும்தான். அதைச் சொல்லித்தான் என்னைப் பயமுறுத்தி வைத்திருப்பாள். வீட்டு வாசலில் என்பதைவிட வீட்டின் கீழ் கதவிலிருந்து 12அடி தூரத்தில்தான் நெல்லிக்காய் மரம் இருந்தது. எப்பொழுதும் கீழ் கதவின் தடுப்பில் வயிற்றை ஏற்றி நெல்லிக்காய் மரத்தை நோக்கி விரல்களை நீட்டிப் பார்ப்பேன். மரத்தை உள்ளங்கையாலே அடக்கி விடுவது போல சாகசம் செய்து பார்ப்பேன்.

எல்லாமும் என்னால் முடிகிறது ஆனால் இந்தக் கீழ் கதவைக் கடப்பதற்கான உயரமும் உறுதியும் மட்டும் இன்னும் கிட்டாதது பெரும் குறையாகவே இருந்தது. எவ்வளவோ முயற்சித்துப் பார்ப்பேன். எக்கி எக்கி வயிற்றில் கீழ் கதவின் வடு எஞ்சியது மட்டும்தான் மிச்சம். வானீர் ஒழுகியே கதவு வெளுத்துப் போயிருக்கும் போல. அக்காள்தான் எப்பொழுது கதவின் வெளிப் புறத்தையும் உட்புறத்தையும் கரித் துணியில் துடைத்துத் தள்ளுவாள்.

“கதவெ சாப்டறான் போல இவன், எப்படிக் கடிச்சி வச்சிருக்கான் பாரு. டேய் யேன் ஒனக்கு நாங்க சாப்பாடே போடறது இல்லயா? இத போயி சாப்டு வச்சிறுக்கே. அதாண்டா ஒனக்கு அடிக்கடி வயித்தால பிச்சிக்கிட்டு அடிக்குது”

இரவு நெருங்கிக் கொண்டிருக்கும் போது மாரியாயி பாட்டி ஏதாவது சினிமா பார்த்தாக வேண்டும். தாத்தாதான் பக்கத்து வீட்டிலிருந்து ஏதாவது சினிமா படம் வாங்கி வந்து போட்டு விடுவார். ஜெனெரேட்டர் சத்தத்துடன் படம் பார்ப்பது என்று பழகிப் போனதாக இருந்தது. பலகை வாங்கில் பாட்டி ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் நேர்த்தியாக அமர்ந்து கொண்டே தொலைகாட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம். வெள்லை கறுப்பு படம் அந்த சிறிய தொலைகாட்சியில் ஓடிக் கொண்டிருப்பது எனக்கு விந்தையாகவே தெரியும். இருந்தும் அப்பொழுது அதைச் சிலாகித்துக் கொள்ளும் அளவிற்கு எனக்குப் பக்குவம் போதவில்லைத்தான்.

“அக்கா. . வரக் காப்பி. . அக்கா வரக் காப்பி கலக்கு”

“போச்சுடா ஆரம்பிச்சிட்டான், தாத்தா இவன கட்டி மரத்துலெ ஏத்துங்க”

“தாத்தா வரக் காப்பி. . கலக்க சொல்லு”

தாத்தா அமைதியாக கயிற்று நாற்காலியில் அமர்ந்து கொண்டே குசுனி பக்கமாகப் பார்த்து வேகமாகக் கத்துவார்.

“கேட்கறாந்தானே களக்கியாந்து கொடென், அவன்கிட்ட போய் மல்லுக்கு நிக்கறா”

உமா அக்காள் கடுப்புடன் வரக் காப்பியை ஒரு பிளாஸ்டிக் குவளையில் கலக்கிக் கொண்டு வந்து வாங்கின் மீது எரிச்சலுடன் வைத்துவிட்டுப் போய் விடுவாள். இந்த வரக் காப்பிக் கோரிக்கை எனக்குச் சின்ன வயதிலிருந்தே பழகிப் போனது. தாத்தா வீட்டில் இருந்தவரைக்கும் எப்பொழுதும் இரவில் சாப்பிட்ட பிறகு வரக் காப்பி கண்டிப்பாக வந்தாக வேண்டும்.

உமா அக்காள்தான் பாவம். அந்தக் குசுனியிலேயே அவளுடைய நேரம் முடிவடைந்துவிடும். இதில் வரக் காப்பி கலக்குவது என்பது மேலும் ஒரு சிரமாகிக் கொண்டேயிருந்தது. படுப்பதற்கு முன்பு உமா அக்காளுக்கு வரக் காப்பி குடிக்கும் பழக்கம் இருந்தது ஒருவேளை என்னாலையும்கூட இருக்கலாம் போலும். எனக்குக் கலக்கும் போதே அவளுக்கும் சேர்த்துக் கலக்கிக் கொண்டு, ஒரு உயரமான டப்பாவில் அதை ஊற்றி வைத்திருப்பாள். பிறகு உறங்குவதற்கு முன்பு அதைக் குடித்துவிட்டுத்தான் படுப்பாள்.

என் வாயில் ஒழுகிக் கொண்டிருக்கும் வாநீரையும் உதட்டோரம் சிந்திக் கிடக்கும் வரக் காப்பியையும் உமா அக்காள்தான் துடைத்துவிட்டிருக்க வேண்டும். காலையில் எழுந்திருக்கும் போது, வரக் காப்பியின் எந்தச் சுவடும் அடையாளமும் எங்குமே இருக்காது.

“யெக்கா, உமாக்கா. . . வரக் காப்பி கலக்கியாந்து கொடு”
“தாத்தா இவன பாருங்க சும்மா சும்மா வரக் காப்பி கேட்டுக்கிட்டே இருக்கான், மரத்துலெ கட்டி ஏத்திருவோம் வாங்க. . தாத்தா. . ,தாத்தா”

நெல்லிக்காய் மரம் எட்டியதில்லைதான். வெறும் வார்த்தைகளிலேயே நான் அடிக்கடி நெல்லிக்காய் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆக்கம்: கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

No comments: