Monday, December 7, 2009

சிறுகதை: கடைசி பயணி மாரிமுத்து

‘24ஆம் எண் பேருந்து எல்லாரையும் சுமந்து கொண்டு வழக்கமான பாதையை நோக்கி நகர்ந்தது. மாரிமுத்து கிழவன் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். மிக கவனமாக வெளியே எறியப்படும் அவரது பார்வை பேருந்தின் நகர்விற்கு ஈடுகொடுக்க முடியாமல் தவறியப்படியே வந்தது.


"ஐயா. . .இந்தத் தோட்ட மாளிகை வந்துச்சின்னா கொஞ்சம் சொல்லிருப்பா"

அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் சொல்லி வைத்தார். எப்பொழுதும் பேருந்து பயணங்கள் அவருக்கு சந்தேகத்திற்குரியவை. உள்ளே ஏறியவுடன் யாரையாவது பிடித்துக் கொண்டு, இறங்குகிற இடம்வரை அவர் மீதே முழுமையான பயணத்தையும் ஒப்படைத்துவிடுவார்.

"தாத்தா. . .நான் சீக்கரம் எறங்கிடுவேன். . டிரைவர்கிட்ட சொல்லிட்டுப் போறேன். . அவரு சொல்லுவாரு எடம் வந்தோன. சரியா? அதுதான் கடைசி ஸ்தோப் போல. . "

பேருந்தை மல்லாந்து பார்த்துவிட்டு சந்தேகத்துடன் தலை ஆட்டிக் கொண்டார். முன்னால் டிக்கெட் துப்பும் இயந்திரத்திற்கு அருகில் அமர்ந்திருக்கும் சீன டிரைவரை ஒருமுறை பார்த்தார். அவன் பேசப் போகும் மலாய் இவருக்குப் பிடிப்படுமா என்பதில் புதியதாக ஒரு சந்தேகம் கிளைவிட்டது.

"ஓய் ஓராங் துவா செப்பாட் னைக்லா" (டே கெழவா சீக்கிரம் ஏறு) என வழக்கமாக எல்லாரும் கடிந்துகொண்டு தன் முதுமையின் மீது எறியும் வார்த்தைகள் அவருக்கு மேலும் பதற்றத்தை அளிப்பது போல, இந்தப் பயணத்தில்கூட அந்தச் சீன டிரைவர் இரைச்சலுக்கு மத்தியில் ஏதோ திட்டி வைத்தான். முதுமை இவர்களுக்கு ஒரு கேலிக்குரிய விஷயம்.

"டே கெழட்டு படுவா. . ஒழுங்க நிக்க தெரியாதா?" எப்பொழுதோ ஒர் இந்திய வாலிபன் அவசரத்தில் எரிந்து விழுந்தது திட்டு திட்டாக பேருந்தின் உரையாடல்களிலிருந்து இடறின. மாரிமுத்துவுடன் பயணத்தில் இருப்பவர்களின் முகங்கள் திடீரென பயங்கரமானவையாகவும் கொடூரமானவையாகவும் தெரிந்தது. இருக்கையின் விளிம்பில் தனது விழிப்புணர்வை ஒடுக்கிக் கொண்டார்.


பேருந்திலிருந்து ஒவ்வொருவராக வெவ்வேறு இடங்களில் இறங்கிக் கொண்டிருந்தனர். மாரிமுத்து மெல்ல எழுந்து பேருந்தின் வேகம் குறையும்வரை மேல் கம்பியைப் பிடித்து சமாளித்துக் கொண்டு ஓட்டுனர் அமர்ந்திருக்கும் இருக்கைக்குச் சென்றார்.

"அப்பே. . இத்து தோட்ட மாளிகை டத்தாங். . சயா துருன்லா. ." (தோட்ட மாளிகை வந்ததும் நான் இறங்க வேண்டும்)

"அப்பா இத்து? பகிதாவ் டாலாம் மெலாயுலா. . அப்பா தெம்பாட்?" (என்ன இடம்? மலாய்மொழியில சொல்லு)

"இத்து பங்குனான் லாடாங்" (தோட்ட மாளிகை என்று மலாயில்)

"யூ பி டுடுக்லா. . சயா ஜெரிட் டெங்கான் குவாட் குவாட். . . யூ புன்யா தெலிங்கா ரோசாக்கான்?" (போய் உட்காரு நான் வேகமா கத்தறேன், உன் காதுதான் கெட்டுப் போச்சே)

மாரிமுத்து தடுமாறினார். எல்லோரும் அவரைக் கேலியாக வேடிக்கை பார்த்தனர். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய ஆடவர் வேகமாகக் கத்தினார்.

"எங்க இப்படி? மார்க்கேட்டுக்காக. . . . "

"இல்லப்பா. . தோட்ட மாளிகைக்குப் போய்க்கிட்டு இருக்கன்..."

"அங்க என்ன இருக்கு? காசு தர்றாங்களா?"

"எஸ்.பி.எம் பரீட்சையில தமிழ் எழுக்க முடியாம போயிருமாம். . அதான் அங்க போராட்டம் நடத்தறாங்க. . அங்கன போய் ஏதோ நம்பளாலே முடிஞ்சதெ செய்லாம்னுதான்"

"நீங்க என்ன செய்யப் போறீங்க? போலிஸ்க்காரன் பிடிச்சி உள்ள வச்சான்னாதான் தெரியும். இருக்கறதும் இல்லாம போய்விடும். வீட்டுக்குப் போங்க"

"இல்ல. . . தமிழுப்பா. . போகனும்"

எல்லோரும் இறங்கிவிட்டப் பிறகு, பேருந்து தோட்ட மாளிகைக்குச் செல்லும் சாலையில் வலதுபுறமாக நின்றதும் மாரிமுத்து இறங்கினார்.

"கெழவன் எறங்குது பாரு. . சீக்கரம்!"

நன்றி: உயிரோசை வார இணைய இதழ்

ஆக்கம்: கே.பாலமுருகன்
                  மலேசியா
                
bala_barathi@hotmail.com

6 comments:

ச ம ர ன் said...

இன்னும் கொஞ்சம் அழுத்தமா எழுதியிருக்கலாம்னு நினைக்கிறேன். நடை ரொம்ப நல்லா இருக்கு

கே.பாலமுருகன் said...

தங்களின் பதிவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

கலையரசன் said...

முடிவு எதிர் பார்த்தமாதிரி இருந்தாலும்... ஒரு ஈர்ப்பு இருக்கு உங்க எழுத்து நடையில!!

கே.பாலமுருகன் said...

@ கலையரசன்

தங்களின் பதிவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

VIKNESHWARAN ADAKKALAM said...

வாழ்க்கையில் எதிர்நோக்கும் நிதர்சன உண்மைகளை கதையில் புனைந்திருக்கிறீர்கள். சிறப்பாக வடித்திருக்கிறீர்கள். சட்டென முடிந்ததை போன்ற உணர்வளிக்கிறது.

கே.பாலமுருகன் said...

மிக்க நன்றி விக்கி