Thursday, January 6, 2011

கவிதை: பொம்மைகள் பிடிக்கும் என்கிற கொடூரம்

எல்லோரும் பொம்மைகளைத்தான்
வாங்கிக் கொடுத்து
என்னைப் பழக்குகிறார்கள்.

சில சமயங்களில் மிதிப்பட்டு
பல நேரங்களில் என்னால் கொடுமைப்படுத்தப்பட்டு
தேவைப்படாத பொழுதுகளில்
மூலைகளில் விசிறியடிக்கப்பட்டு
எனது முழுமையான கோபத்தையும்
அதிகாரத்தையும்
வெறுப்பையும்
அலட்சியத்தையும்
காட்டி காட்டி
சோர்வடையும்வரை
என்னை எதற்காகவோ
பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

பொம்மைகளுடன் படுக்க வைத்து
அடம் பிடித்த சமயங்களில்
பொம்மையை என்னுள் திணித்து
காலுடன் சேர்த்துப் பொம்மையைக்
கட்டிப்போட்டு
மீண்டும் மீண்டும் ஒன்றும் செய்யாத
அந்தப் பொம்மையை நேசிக்க வைத்திருந்தார்கள்.

வீட்டின் ஏதோ சில பகுதிகளில்
இன்றளவும் பிய்த்து எறியப்பட்டுக்
கிடக்கின்றன
யார் யாரோ வாங்கிக் கொடுத்த
கரடி பொம்மைகளும்
நாய் பொம்மைகளும்.

ஒவ்வொன்றிலும்
நான் திரும்ப திரும்ப
எனக்குப் பொம்மைகள்
பிடிக்கும் என்கிற
கொடூரத்தை உணர்ந்து கொள்கிறேன்.

கே.பாலமுருகன்
மலேசியா