
சிறுமியின் கால்களில்
ஒட்டியிருந்தது போர்.
பாத வெடிப்புகளில்
ஒளிந்திருந்தார்கள்
போர் வீரர்கள்.
தரைப்புழுதியிலிருந்து
போர் ஆரம்பமாகும்
எச்சரிக்கை.
பாதத்தை மண்தரையில்
உரசி தேய்த்து
கூர்மையாக்கினாள் ஆயுதங்களை.
கன்னத்தை உப்பி
கண்களை உருட்டி
கைகளை உயரமாக நீட்டி
சர்வதிகாரியாகி நின்றாள்.
எல்லாமும்
போருக்குத் தயாராகின.
காற்று உதிர்த்த இலைகள்
பிணங்களாகி விழுந்தன.
தொடைகளைத் தூக்கி
இராணுவம் போல நடந்தவள்
வாசல்வரை வந்து
உற்றுப் பார்த்துவிட்டு
கன்னத்தில் முத்தமிட்டாள்.
போர் முடிந்தது.
கே.பாலமுருகன்
No comments:
Post a Comment