Thursday, September 1, 2011

கவிதை: ஒரு புகைப்படத்தில் நிகழ்ந்த மரணம்


1
இப்பொழுது நீங்கள்
பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில்
முன்பொருமுறை நானும் இருந்தேன்.

2
புகைப்படத்தைப் பார்த்துவிட்டு
வைப்பதற்கு முன்பாக
நான் உங்களிடம் அதில் காணாமல் போயிருக்கும்
என்னைப் பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

3
ஒரு புகைப்படத்திலிருந்து
காலியாவதை நான் எப்பொழுதும் விரும்பியதில்லை.
ஆனாலும் துரத்தப்படுவதற்கு முன்
வெளியேற வேண்டியுள்ளது.

புகைப்படம் எடுத்தவனின்
காட்சிகளில்
நான் ஒரு துண்டு மாமிசம்போல
ஒட்டிக்கொண்டிருக்கிறேன்.
இது போல பற்பல புகைப்படங்களில்
நான் அவர்களின் மிக உயர்ந்த இலட்சிய
காட்சிகளின் முழுமைக்குள்
ஒரு எதிர்பாராத பாகமாகி போயிருக்கின்றேன்.

காட்சிகளை துண்டாக்க முடியாதவர்களும்
அல்லது புகைப்படங்களின் எந்தப் பகுதியையும்
வெட்ட முடியாதவர்களும்
இடையில் இருக்கும் என்னை
குரூரமாகப் பார்க்கிறார்கள்.
ஒரு தருணம் கிடைத்தாலும்
நான் சிதைக்கப்படுவது உறுதி.

நெடுங்காலம் பல இரவுகள்
அவர்களின் புகைப்படத்திலிருந்து
எப்படித் தப்பிப்பது என்றே நினைத்திருந்தேன்.
புகைப்படங்கள் பழுதடைந்து சிதிலமடைந்து
வெளுத்து தன் வர்ணங்களை உதறியும்
இத்துனை நாள் உடனிருந்த காரணத்திற்காக
நன்றி மறவாமல்
கைகளோ கால்களோ உடலின் ஏதாவது ஒரு பகுதி
காட்சிகளால் சேமிக்கப்படுகின்றன.

புகைப்படங்களில் சிக்கிக்கொள்வது
அவ்வளவு எளிமையானது கிடையாது.
ஒருமுறை சிக்கிக்கொள்வதன் மூலம்
நமக்கொரு வரலாறு உருவாகியிருக்கும்.
ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும்.


ஆகையால்
புகைப்படத்திலிருக்கும் என்னைக்
கொல்வதைப் பற்றியே பெரும் கனவுகள்
உருவாகிக்கொண்டிருக்கின்றன.

திடீரென உறக்கத்திலிருந்து விழித்து
என்னையே பார்க்கிறார்கள்.
பல மலைமேடுகள் கடந்து வந்து
ஒரு மரத்தையும் அதில் அமர்ந்திருக்கும் குருவியையும்
அதன் அழகியலையும் படம் பிடித்துச் சென்ற அவர்களின்
புகைப்படங்களில் நான் எப்படி வந்தேன்?

பொறுக்க முடியாதவர்கள்
கணினியைப் பயன்படுத்தி
காட்சிகளை ஒட்டி
நானிருக்கும் புகைப்படத்துடன்
அவர்களின் புகைப்படத்தை இலாவகமாக
தத்வரூபமாக ஒட்டி
உள்ளே நுழைகிறார்கள்
என்னைக் கொலை செய்வதற்கு.

எந்நேரமும் சிதைக்கப்படும் நிலையில்
இத்தனை காலம் என்னுடன் புகைப்படத்தில்
தங்கியிருந்த அந்த மரத்தையும் குருவியையும்
ஒருமுறை பார்க்கிறேன்.

கே.பாலமுருகன்


No comments: