Friday, September 16, 2011

கவிதை: பொருந்தாத காலணி


1

அடுத்த வருடம் என் கால்கள்
வளர்ந்துவிடும் எனச் சொல்லி
அம்மா வாங்கிக் கொடுத்த
பொருந்தாத காலணிக்குள்
ஒவ்வொரு வருடமும் ஒரு இன்ச்
இடைவெளி அப்படியே இருக்கிறது.


2

நடக்கத் துவங்கிய வயதில்
தொந்திமாமாவின் பெரிய சிலிப்பர்
முத்து பெரியப்பாவின் வெளிக்காட்டு சப்பாத்தி
அப்பாவின் பெரிய காலணி
என அனைத்தையும்
போட்டு போட்டு நடந்து பழகியது
என் கால்களுக்கு நான் செய்த துரோகம்.
எப்பொழுது காலணி வாங்கினாலும்
ஒரு இன்ச் கூடுதலாகத் தேடுகிறது மனம்.

3

கால்கள்
இரப்பர் போல இருந்திருந்தால்
இழுத்து சரி செய்திருப்பேன்
காலணிகளின் அளவுக்குத்
தகுந்தமாதிரி.

8,9,10 அளவு என
வளராத கால்களுக்காக
வந்து சேரும் காலணிகளை
அச்சத்துடன் எடுத்து அணிகிறேன்.
உடலும் உள்ளமும்
தொளதொளக்கிறது
உதற வழியில்லாமல்.

கே.பாலமுருகன்

No comments: