Tuesday, November 1, 2011

கவிதை: இந்தத் தழலிலும் எரியாத தகவுரை


நான் என்னைப் பற்றி ஒரு தகவுரை வழங்கவேண்டியிருந்ததால்
கொளுந்துவிடும் தழலுக்கு முன்பாக அமர்ந்திருக்கின்றேன்.
காலம் எரிந்து சாம்பலாகிவிடுவதையும்
ஞானத்தின் உச்சம் நீலமாகவும் மஞ்சளாகவும் மாறி
தகித்தடங்குவதையும் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு முனகலும் ஒரு நிமிடத்தைத் தின்று தீர்க்கிறது.
ஏதாவது ஒரு தருணத்தில் நான் கட்டும் என் பிம்பம்
பொடிகளாகி வெடித்துவிடும் என்கிற அச்சம்
தழலிடமிருந்து கொஞ்சம் தள்ளி அமர வைத்திருந்தது.
அருகாமையும் கவனமின்மையும் சட்டென ஒரு படிக்கொடுத்தலுக்கு
என்னைத் தயார்ப்படுத்த நேரிடுகிறது.
நினைவுகளையும் இருத்தலையும் சிறுக சிறுக உறிஞ்சும்
என் தகவுரையின் முன்னுரை இப்படித்தான் தொடங்குகிறது:
“நான் அழிக்கப்படவேண்டியவன் என்பதால்
என்னை நானே அழித்துக்கொள்ளும் ஒரு பரிந்துரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
ஒருவேளை இதைப் படித்து முடிக்கும் அடுத்த கணம்
நீங்களும் பரிந்துரைக்கக்கூடும் என்னை அழிப்பது
மிகவும் வசதியான ஒரு காரியம் என.
நான் கழற்றி வைக்கும் முகமூடியின் வியர்வைநெடி
உங்களைத் துன்புறுத்தம் அல்லது என்னுடைய தகவுரையில் உங்களின் பெயர்
இடம்பெறுவதன் மூலம் இம்சிக்கப்படுவீர்கள்.
இந்தத் தகவுரை யாருக்காகத் தயாரிக்கப்படுகிறது
யாரை யாரிடமிருந்து அகற்றவுதற்காக முன்மொழியப்படுகிறது
என யாருக்கும் தெரிவதற்கில்லை. தகவுரை தொடரும். . . .”
ஒரு திரைப்படம் முடிந்த களைப்புடன் மிகவும் சராசரியாக
நான் தழலிடமிருந்து விடைப்பெருகிறேன்.
ஒரு துண்டு அக்கினியில் என்னால் அவ்வளவுத்தான்
நுழைக்க முடிந்தது.
தழலுக்கு முன் அமர்வதால் எதையெல்லாம் எரித்து
அழிக்க முடிகிறது என்பதைப் புரிவதன் வழி
இப்பொழுது உங்களால் ஒரு தீர்மானத்திற்கு வரமுடிகிறது.
பொடி பொடியாகி கரைவது ஒரு தீர்க்கமான அழிவல்ல
ஒரு தற்காலிகமான தகவுரை மட்டுமே.

கே.பாலமுருகன்

No comments: