Friday, August 21, 2009

நிலத்திற்கு மேலே நடப்பவர்களின் கதை


1

எல்லோரும் நடந்துவிட்டு
கொஞ்சம் நிலத்தை
எனக்காக விட்டுவைத்திருந்தார்கள்.
நடந்தேன். தவழ்ந்தேன்.
பற்றுக்கொண்டேன். பைத்தியமானேன்.

மீண்டும் சேகரிக்க
ஏதுமில்லாததால்
முன்னோர்களின் காலடி
சப்தங்களை நிலம் முழுக்க
ஆராய்ந்தேன். சிலாகித்தேன்.
கண்டறிந்தேன். மீண்டும் பற்றுக்கொண்டேன்.

பிறகொருநாள்
வேலிகள் பூட்டினேன்.
பாதுகாத்தேன். பயம்கொண்டேன்.
பெரும்வெளியின் ஒரு துளியில்
பற்றுக்கொண்டேன்.

வேலியில்
முள்கம்பிகள் பொருத்தினேன்.
குருதி சொட்ட கீறி
பார்த்தேன். நிம்மதிகொண்டேன்.
தினம் ஒருமுறை காயப்பட்டு
அப்பொழுதும் பற்றுக்கொண்டேன்.

உறக்கத்தின் பாதியில்
நடுநிசிக்கு ஓடிவந்தேன்.
வீடு தொலைந்தேன். ஆடைகள்
தொலைந்தேன். நடுவீதியில்
கொண்ட பற்றைப் பிடித்துக்கொண்டு
நடந்தேன்.

நிலத்தின் எல்லாம் திசைகளிலும்
சிக்குண்ட என்னைத் தேடி பிடித்து
சட்டைபைக்குள் அடைத்துவிட்டு
விடுபடும் கணத்தில்
நிலம் என் கால்களைப் பிடித்துக்கொண்டு
பின் தொடர. யார் அகதி என்கிற குழப்பத்தில்
எல்லோரும் நிலத்தின் மேல் நிலத்துடன் நடக்கத் துவங்கினோம்.

2
விக்ரமாதித்யன் கதை சொல்லாததால்
வேதாளமெல்லாம் நிலத்தின்
முதுகைப் பிடித்துக் கொண்டு
செத்துப் போயின.
வேதாளத்தைக் கொன்ற பாவத்தை
இன்று சுமப்பதென்னவோ
ஒரு வரலாறு மட்டுமே.

3
உத்தரவு கிடைத்ததும்
நகரத்துவங்கினோம்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு.

கே.பாலமுருகன்

மலேசியா

bala_barathi@hotmail.com

No comments: