Monday, May 16, 2011

கவிதை: மேசையின் மீதிருந்த வாக்கியம்

பருகிவிட்டு அரைநீருடன்
வைக்கப்படிருந்த கண்ணாடி குடுவையும்
தலைக்கு மேல் எரியும்
மஞ்சள் விளக்கும்
ஒரு தனிமையான மேசையும்.

நானும் அவளும்
நீண்ட நேரம்
கவனித்துக்கொண்டிருந்த மேசைக்கு
12 வயதாவது இருக்கக்கூடும்.


அதன் மேற்பரப்பில்
கை வைத்தபோது
ஆயிரமாயிரம் கைகள்
அதனுள்ளே புதைந்திருந்தன.

இருவரும் கைகளக் கோர்த்துக்கொண்டு
மேசையின் மீது
தலைச்சாய்த்துப் படுத்துக்கொண்டோம்.
என்னவெல்லாம் நடந்திருக்கக்கூடும்?

வாக்குவாதம் கொதிப்படைந்த
காதலர்கள் கத்தியாலும்
கார் சாவியாலும் வதைச் செய்து

மனமுடைந்த பெண்களும் ஆண்களும்
கண்ணீரால் நனைத்து
இம்சைப்படுத்தி

குதுக்கலமடைந்த இளைஞர்கள்
பலம்கொண்டு
கைகளை இறுக்கி
பதம்பார்த்து

சோர்வுற்ற சிறுவர்கள்
வாய்நீரை ஒழுகவிட்டு
நகங்களால் கீறி

குழந்தைகளின்
மலமும் மூத்திரமும்
சாப்பாட்டுத் தட்டுகளின் மிச்சமும்
நாற்றமும் வீச்சமும்
உடைந்த கண்ணாடிகளின்
தொடுதலும் உரசலும்
பாட்டும் அழுகையும்
கோபமும் பாசமும்
வெறுப்பும் களைப்பும்
என எல்லாவற்றையும்
விழுங்கிக்கொண்டிருந்த
மேசையின் மீது ஒரே ஒரு வாக்கியம்
மீதமாகக் கிடந்தது.

"Ah Peng Seafood restaurant"

கே.பாலமுருகன்
24.04.2011